கடையம் அருகே சொத்து தகராறில் பயங்கரம்: செங்கல்சூளை அதிபர் சரமாரி வெட்டிக்கொலை - மகனுக்கு போலீஸ் வலைவீச்சு

கடையம் அருகே சொத்து தகராறில் செங்கல்சூளை அதிபரை வெட்டிக்கொலை செய்த மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-11-27 23:30 GMT
கடையம், 

தென்காசி மாவட்டம் கடையம் அருகே புலவனூர் பொன்மலை நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 66). செங்கல்சூளை அதிபரான இவருக்கு சொந்தமான விவசாய நிலம், கடையம் ராமநதி அணைக்கு செல்லும் வழியில் வெள்ளையம்பிள்ளை மதகு அருகில் உள்ளது.

அங்கு செங்கல்சூளை அமைத்து, அருகில் விவசாயம் செய்து வந்தார். இவருடைய மனைவி வெள்ளையம்மாள். இவர்களுக்கு திருக்குமரன் (42), ராமகிருஷ்ணன் ஆகிய 2 மகன்கள், 2 மகள்கள் இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு தங்கராஜ், சுகந்தா என்பவரை 2-வதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பின்னர் தங்கராஜ் தனது முதல் மனைவி வெள்ளையம்மாளுக்கு 15 ஏக்கர் நிலத்தையும், 2-வது மனைவி சுகந்தாவுக்கு 25 ஏக்கர் நிலத்தையும் எழுதி வைத்தார்.

தொடர்ந்து தங்கராஜ் முதல் மனைவி, குழந்தைகளை விட்டு பிரிந்து, 2-வது மனைவியுடன் தெற்கு கடையம் நடு தெருவில் வசித்து வந்தார். வெள்ளையம்மாளின் நிலத்துக்கு செல்வதற்கு சுகந்தாவின் நிலத்தின் வழியாகத்தான் பாதை இருந்தது. இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்தது.

முதல் மனைவியின் மகனான திருக்குமரன் விவசாயம் செய்து வந்தார். அவருடைய தம்பி ராமகிருஷ்ணன் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றார். பின்னர் ராமகிருஷ்ணனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தார். மகன் இறந்த துக்க நிகழ்ச்சிக்கும் தங்கராஜ் செல்லவில்லை என கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் தங்கராஜ் 2-வது மனைவிக்கு வழங்கிய நிலத்தைச் சுற்றிலும் முள்வேலி அமைத்தார். இந்த நிலையில் திருக்குமரன் தனது நிலத்துக்கு செல்வதற்காக, அந்த முள்வேலியை அகற்றினார். அப்போது அங்கு வந்த தங்கராஜ் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த திருக்குமரன் அரிவாளால் தந்தை என்றும் பாராமல் தங்கராஜை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த தங்கராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து திருக்குமரன் தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட தங்கராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான திருக்குமரனை வலைவீசி தேடி வருகின்றனர். கடையத்தில் சொத்து தகராறில் தந்தையை மகனே வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்