திருமருகல் அருகே 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பிடுங்கி வாய்க்காலில் வீசிய மர்ம நபர்கள் போலீசார் விசாரணை

திருமருகல் அருகே 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பிடுங்கி மர்ம நபர்கள் வாய்க்காலில் வீசி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-11-29 02:13 GMT
திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளிலும் மரக்கன்றுகள் நட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன் பேரில் ஒன்றியத்தில் பெரும்பாலான ஊராட்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) க.அன்பரசு மற்றும் ஒன்றிய குழு தலைவர் ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் பேரில் கீழப்பூதனூர் ஊராட்சியில் கீழப்பூதனூர், மேலப்பூதனூர், நத்தம், தாதன்கட்டளை, அத்திபடுகை உள்ளிட்ட பகுதிகளில் 1000-த்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடப்பட்டது. இந்த மரக்கன்றுகளுக்கு மூங்கிலால் செய்யப்பட்ட கூண்டுகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

பிடுங்கி எறிந்த மர்ம நபர்கள்

இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் கீழப்பூதனூரில் இருந்து மேலப்பூதனூர் செல்லும் சாலையில் நடப்பட்டிருந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை கூண்டோடு பிடுங்கி அருகில் உள்ள வாய்க்காலில் எறிந்து விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) க. அன்பரசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைவாணன், பொறியாளர் செந்தில் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.டி.எஸ். சரவணன், ஆர்.இளஞ்செழியன், அபிநயா அருண்குமார், வார்டு உறுப்பினர் செல்வகணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

போலீசில் புகார்

வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவுறுத்தலின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி மரக்கன்றுகளை பிடுங்கி எறிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருக்கண்ணபுரம் போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்