மழைநீர் வடிகால் கட்டித் தரக்கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

பள்ளிகொண்டா அருகே மழைநீர் வடிகால் கட்டித்தரக்கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அரைமணிநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

Update: 2020-11-29 11:00 GMT
அணைக்கட்டு,

அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டாவை அடுத்த இறைவன்காடு ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுக்கொல்லை கிராமம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளது. கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கிராமத்தில் இருந்து வெளியேறும் மழைநீர் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக சென்று ஏரியில் கலந்து வந்தது.

10 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும்போது, அந்தப் பகுதியில் சாலை அமைக்கப்பட்டது. இதனால் மழை வெள்ளம் வெளியேற முடியாமல் தெருக்களில் 3 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி வந்தது. சாலை அமைத்த தனியார் நிறுவனம் அந்தப் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் கட்டித் தருவதாக உறுதியளித்த பிறகே சாலை அமைக்க அப்பகுதி மக்கள் சம்மதம் தெரிவித்தனர்.

ஆனால் இதுநாள் வரை தனியார் நிறுவனம் மழைநீர் வடிகால்வாய் கட்டித் தரவில்லை. இதுகுறித்து பலமுறை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும், 6 வழிச்சாலை அமைத்த தனியார் நிறுவனத்துக்கும், அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நிவர் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் காட்டுக்கொல்லை கிராமத்தில் உள்ள தெருக்களில் 3 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நின்றது. தேங்கிய மழைநீரில் 3 வயது குழந்தை தவறி விழுந்தது. அங்கிருந்த பொதுமக்கள் குழந்தையை உயிருடன் மீட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் மழைநீர் வடிகால்வாய் கட்டித்தராத 6 வழிச்சாலை அமைத்த தனியார் நிறுவனத்தைக் கண்டித்தும், அந்தக் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் மழைநீர் வடிகால்வாய் கட்டித்தரக்கோரியும் நேற்று காலை 10 மணியளவில் காட்டுக்கொல்லை கிராமம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி மேலாளர் பெரியசாமி, அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பள்ளிகொண்டா போலீசார் விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

சுங்கச்சாவடி மேலாளர் பெரியசாமி, காட்டுக்கொல்லை பகுதியில் மழைநீர் வடிகால்வாய் கட்டுவதற்கான திட்டப்பணிகள் குறித்து எந்த ஆவணங்களும் இல்லை. பொது மக்களின் சுகாதாரம், உயிர் தான் முக்கியம். எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளிடம் பேசி இன்னும் ஓரிரு மாதங்களில் மழைநீர் வடிகால்வாய் கட்டுவதற்கான பணியை தொடங்க நடவடிக்கை எடுப்பேன், என்றார்.

இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கிராம பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். சாலை மறியலால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

மேலும் செய்திகள்