திருமலையில் பாரம்பரிய சின்னங்களை ஆர்வத்துடன் பார்த்த மாணவ-மாணவிகள்

தொல்லியல் துறை சார்பில் திருமலையில் பாரம்பரிய சின்னங்களை அறியும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொல்லியல் துறை சார்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் அதை ஆர்வத்துடன் பார்த்தனர்.

Update: 2020-11-30 17:34 GMT
திருமலையில் உள்ள தொல்லியல் பாரம்பரிய சின்னங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்த காட்சி.
சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடியை அடுத்துள்ள திருமலை வரலாற்று சிறப்பும், ஆன்மிக சிறப்பும் நிறைந்தது. இங்கு மலை மீது சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சிலைகள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள குகைகளில் சமணர்கள் வந்து தங்கியதாக கூறப்படுகிறது.இத்துடன் இந்த மலையில் சித்தர்கள் பலர் வந்து தங்கி வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. இங்கு திருவண்ணாமலையை போலவே பவுர்ணமி அன்று கிரிவலம் நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த பகுதியில் தான் சீதையை தேடி வந்த ராமர் தங்கியதாகவும் கூறப்படுறது. இதனால் திருமலை தற்போது சிறந்த சுற்றுலா பகுதியாக விளங்குகிறது. இங்கு பாறைகளில் உள்ள எழுத்துக்கள், வரலாற்று காலத்துடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதிக்கு பல்வேறு தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் வந்து ஆராய்ச்சி செய்கின்றனர்.

பாரம்பரிய சின்னங்கள்
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மற்றும் சிவகங்கை தொல்நடைக்குழுவும் இணைந்து சிவகங்கை மாவட்டம் திருமலையில் தொன்மை போற்றும் பாரம்பரியச் சின்னங்களை அறிதல் நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சிக்கு மதுரை தொல்லியல் அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் காப்பாட்சியர் ஆசைத்தம்பி வரவேற்று பேசினார்.

மதுரை அருங்காட்சியக காப்பாட்சியர் மருதுபாண்டியன், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜன், தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன், ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் அனந்தராமன், திருமலை அய்யனார், சிவகங்கை தொல்நடைக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் நரசிம்மன், பிரபாகர், ஆசிரியர்கள், வரலாற்று ஆர்வலர்கள் சிவகங்கை தமிழ் சங்க அமைப்பினர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருமலையில் உள்ள பாரம்பரிய சின்னங்களை பொதுமக்களும், தொல்லியல் துறை சார்ந்த கல்லூரி மாணவ-மாணவிகளும் ஆர்வத்துடன் பார்த்தனர். சிலைகளின் தொன்மைகளை கேட்டறிந்தனர்.இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா செய்து இருந்தார்.

மேலும் செய்திகள்