கரியமங்கலம் தடுப்பணை வலதுபுற கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டதை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

செங்கம் அருகே கரியமங்கலம் தடுப்பணை வலதுபுற கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டதை கண்டித்து விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2020-11-30 18:31 GMT
செங்கம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை கரியமங்கலம் பகுதியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டபோது எடுத்த படம்
தண்ணீர் நிறுத்தப்பட்டது
செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தீத்தாண்டப்பட்டு, வளையாம்பட்டு, தோக்கவாடி ஏரிகள் நிரம்பி தண்ணீர் கோடி போனது. குப்பநத்தம் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் செய்யாற்றின் வழியாக செங்கம் அருகே உள்ள பல்வேறு கிராம ஏரிகளுக்கும், நீர் நிலைகளுக்கும் செல்கிறது.

செங்கத்தை அடுத்த கரியமங்கலம் செய்யாற்றில் உள்ள தடுப்பணையில் இருந்து வலதுபுற கால்வாய் வழியாக சொர்ப்பனந்தல், மேல்கரிப்பூர், தரடாப்பட்டு, வணக்கம்பாடி, சமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் செல்வது வழக்கம். அதன்படி சொர்ப்பனந்தல் ஏரி நிரம்பிய நிலையில், கரியமங்கலம் தடுப்பணையின் வலதுபுற கால்வாயில் இருந்து தண்ணீர் செல்வது நிறுத்தப்பட்டது.

விவசாயிகள் சாலைமறியல்
இதனால் மேல்கரிப்பூர், தரடாப்பட்டு, வணக்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு குப்பநத்தம் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் செல்லாததால் அந்தப்பகுதி விவசாயிகள் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அதிகாரிகளிடம் கூறியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று கரியமங்கலம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் கரியமங்கலம் தடுப்பணை வலது கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்