கனமழையில் இருந்து பயிர்களை காக்க விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்? - வேளாண் இணை இயக்குனர் விளக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையில் இருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் விளக்கி உள்ளார்.

Update: 2020-11-30 23:15 GMT
தூத்துக்குடி, 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தென்மாவட்டங்களில் நாளை (புதன்கிழமை) , நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அதிக காற்றும், மிக கனமழையும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதனால் விவசாயிகள் பயிர்களை பாதுகாக்க கீழ்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளலாம். விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு உடனடியாக பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். மழையின் காரணமாக பயிர்கள் சேதமடையாமல் இருக்க விவசாயிகள் தங்கள் வயல்களில் முறையான வடிகால் வசதி செய்ய வேண்டும். தற்போது உரமிடுதல், பூச்சிகொல்லி, களைக்கொல்லி தெளித்தலை தவிர்க்க வேண்டும். நாளை முதல் 2 நாட்களுக்கு விவசாயிகள் திறந்த வெளியில் வேளாண் பணிகளை மேற்கொள்ள வேண்டாம்.

தென்னை விவசாயிகள் நல்ல காய்ப்பு உள்ள தோப்புகளில் இளநீர் காய்கள், தேங்காய்களை முன்னெச்சரிக்கையாக அறுவடை செய்ய வேண்டும்.

மரத்தின் தலைப்பகுதியில் அதிக எடையுடன் காணப்படும் தென்னை ஓலைகளை வெட்டி அகற்றிட வேண்டும். தென்னை மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். மரங்களின் அடிப்பகுதியில் மண்ணை உயரமாக அமைத்து வலு சேர்ப்பதன் மூலம் தென்னை மரங்களை புயல் சேதத்தில் இருந்து காப்பாற்றலாம்.

தென்னை மரங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் தென்னை விவசாயிகள் உடனடியாக தென்னை மரங்களை காப்பீடு செய்ய வேண்டும். ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய மரங்களை காப்பீடு செய்யலாம்.

ஒரு எக்டருக்கு சுமார் 175 தென்னை மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய முடியும். 4 அல்லது 7 வயது முதல் 15 வயது வரை உள்ள மரம் ஒன்றுக்கு ரூ.2.25-ம், 16 வயது முதல் 60 வயது வரை உள்ள மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.3.50-ம் காப்பீட்டுக் கட்டணமாக செலுத்தி காப்பீடு செய்து மகசூல் இழப்பில் இருந்து விவசாயிகள் பயன்பெறலாம்.

நெல் வயல்களில் கனமழையால் தண்ணீர் தேங்கினால், வயல்களில் உள்ள தண்ணீரை தாழ்வான வாய்க்கால் அமைத்து தண்ணீரை வெளியேற்றி பின்பு ஒரு ஏக்கருக்கு 2 கிலோ யூரியா, ஒரு கிலோ துத்தநாக சல்பேட் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் இலைகள் மீது தெளித்து பயிரை காப்பாற்ற வேண்டும். கனமழையால் பயிர்சேதம் ஏற்பட்டால் விவசாயிகள் உடனடியாக தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி விவரம் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்