ஊர்க்காவல் படைக்கு தேர்வான 50 பேருக்கு பணிநியமன ஆணை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்

தஞ்சை மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு தேர்வான 50 பேருக்கு பணி நியமன ஆணையை போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர்சஞ்சய் வழங்கினார்.

Update: 2020-12-01 02:54 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய பிரிவுகளில் ஊர்க்காவல்படையில் 50 காலிப்பணியிடங்கள் இருந்தன. இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர் சஞ்சய் உத்தரவுப்படி கடந்த 28, 29 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற்றது.

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த இந்த தேர்வில் 1,800 பேர் கலந்து கொண்டனர். இதில் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டவர்களின் கல்வித்தகுதி சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.

50 பேருக்கு பணி ஆணை

இதையடுத்து 43 ஆண்களும், 7 பெண்களும் என மொத்தம் 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஊர்க்காவல்படை சரக தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர்சஞ்சய் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், “ஊர்க்காவல்படையில் 50 காலிப்பணியிடங்களுக்கு 2,400 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 1,800 பேர் மட்டும் தேர்வுகளில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு தேர்வான 50 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது”என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஊர்க்காவல்படை தளபதி சுரேஷ், உதவி மண்டல தளபதி மங்களேஸ்வரி, தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன் மற்றும், ஆயுதப்படை போலீஸ் சூப்பிரண்டு சம்பத்பாலன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்