அரசு உள் இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த 21 மாணவர்களுக்கு உபகரணங்கள் அமைச்சர் வழங்கினார்

அரசு உள்இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த 21 மாணவர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் மருத்துவ உபகரணங்களை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.

Update: 2020-12-01 04:08 GMT
தர்மபுரி,

அரசு உள்இடஒதுக்கீட்டில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 மாணவ-மாணவிகள் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை தாங்கி 21 மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ உபகரணங்கள், சீருடைகள் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அமைச்சர் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 21 ஏழை மாணவ-மாணவிகள் அரசு உள் இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். இந்த மாணவ, மாணவிகளுக்கு சரஸ்வதி பச்சியப்பன் கல்வி அறக்கட்டளை சார்பில் முதலாமாண்டு கட்டணமாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் வருகிற கல்வி ஆண்டில் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த 6 பேர் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்தனர்.

மாவட்டத்திற்கு பெருமை

இந்த ஆண்டு 313 பேர் மருத்துவ படிப்பிலும், 97 பேர் பல் மருத்துவ கல்லூரிகளிலும் சேர்ந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் 164 மாணவ, மாணவிகள் நீட் பயிற்சி பெற்றனர். இதில் 54 பேர் தேர்ச்சி பெற்று 43 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். 11 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இதில் 21 பேர் அரசு பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலேயே அதிக மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாவட்டம் தர்மபுரி மாவட்டம் என்பது பெருமைக்குரிய நிகழ்வாகும். மருத்துவ படிப்பில் சேர்ந்து உள்ள மாணவ-மாணவிகளுக்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், நகர செயலாளர் பூக்கடை ரவி, ஒன்றிய செயலாளர்கள் நீலாபுரம் செல்வம், சிவப்பிரகாசம், மதிவாணன், கோபால், விசுவநாதன், செந்தில்குமார், மகாலிங்கம், செந்தில், அறங்காவலர் குழு மாவட்டத்தலைவர் ரங்கநாதன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்