8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு முதுகலை அறிவியல்-தொழில்நுட்ப பிரிவு இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்

அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் 8 மாதங்களுக்கு பிறகு முதுகலை அறிவியல்-தொழில்நுட்ப பிரிவு இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது.

Update: 2020-12-03 00:27 GMT
பெரம்பலூர்,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே மத்திய-மாநில அரசுகள் படிப்படியாகத் கொரோனா ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அதனை தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது.

இதற்கிடையே பல்கலைக்கழக மானியக் குழு, கல்லூரிகள் தொடங்கி வகுப்புகள் நடைபெறுவதற்கான கால அட்டவணையை வெளியிட்டது. தமிழகத்தில் டிசம்பர் 2-ந்தேதி முதுகலை அறிவியல், தொழில்நுட்பப் பிரிவு இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

வகுப்புகள் தொடக்கம்

அதன்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் முதுகலை அறிவியல், தொழில்நுட்ப பிரிவு இறுதியாண்டு மாணவர்களுக்கு நேற்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டது. மாணவ-மாணவிகள் முககவசம் அணிந்து கல்லூரிக்கு வந்தனர். மேலும் வகுப்பறையில் சமூக இடைவெளியை பின்பற்றி மாணவ-மாணவிகள் அமர வைக்கப்பட்டு, பேராசியர்கள் பாடங்களை கற்பித்தனர்.

மேலும் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வகுப்பறைகளில் வைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் கல்லூரிக்கு சில மாணவ-மாணவிகள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்