ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் குளிப்பவர்கள் மீது நடவடிக்கை - கலெக்டர் கார்த்திகா எச்சரிக்கை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் குளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கார்த்திகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-12-03 10:00 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை கலெக்டர் கார்த்திகா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் ஆய்வு நடத்திய அவர் காவிரி ஆற்றில் நீர்வரத்தை அளவிடும் முறை, தற்போதைய நீர்வரத்து நிலவரம் ஆகியவை குறித்து இளநிலை பொறியாளரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படும் ஆலம்பாடி பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் குளிப்பதை தடுக்க வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டார். தடையை மீறி காவிரி ஆற்றில் குளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து ரூ.450 கோடி மதிப்பில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்-2 ஐ செயல்படுத்த ஒகேனக்கல் முதலை பண்ணை அருகே தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், கூட்டு குடிநீர் திட்ட நீர் உறிஞ்சு நிலையம், நீர் சுத்திகரிப்பு நிலையம், நீருந்து நிலையம், சமநிலை நீர்த்தேக்கம் ஆகியவற்றை பார்வையிட்டு அவற்றின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார்.

ஜல்சக்தி அபியான் திட்டத்தினை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், பருவதனஅள்ளியில் அதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, உதவி கலெக்டர் தணிகாசலம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அலுவலர் சங்கரன், தாசில்தார் சேதுலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தன், ரேணுகாஅம்மாள், உதவி பொறியாளர்கள் மாலதி, சீனிவாசன், சுரேஷ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்