தரங்கம்பாடி பகுதியில் கடல் சீற்றம்: டேனிஷ்கோட்டையை நெருங்கி வரும் கடல் அரிப்பு

தரங்கம்பாடி பகுதியில் கடல் சீற்றத்தால் டேனிஷ்கோட்டையை கடல் அரிப்பு நெருங்கி வருகிறது. துறைமுக தடுப்பு சுவர் பாதிப்பு அடைந்து உள்ளது.

Update: 2020-12-04 02:05 GMT
பொறையாறு,

கடந்த வாரம் ஏற்பட்ட நிவர் புயல் முதல் தற்போதைய புரெவி புயல் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் கடல் சீற்றத்தால் கடல் அரிப்புக்கு உள்ளாகி உள்ளது தரங்கம்பாடி பகுதி. தொடர் கடல் சீற்றம் காரணமாக கடற்கரை அருகே உள்ள மணல் திட்டுகள் மறைந்து, கடல் அரிப்பின் காரணமாக கடல் நீர் கொஞ்சம், கொஞ்சமாக உட்புக ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்ற டேனிஷ் கோட்டையின் மிக அருகில் கடல் அரிப்பு அதிகமாகி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கோட்டை மதில் சுவரில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருந்த கடல் அலைகள், தற்போது மணலை அரித்து, 10 மீட்டர் தொலைவிற்குள் வந்து விட்டது.

சரக்கு குடோன் இடிந்தது

கோட்டைக்கு அருகே டேனிஷ் ஆட்சி காலத்தில், கப்பல்களில் இருந்து சரக்குகளை இறக்கி வைக்க பயன்பட்டதாக கருதப்படும் சரக்கு குடோன் ஒன்று காலப்போக்கில் பயன்பாட்டில் இல்லாமல் இடிந்து போனது. மீதம் இருத்த சுவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதைந்து போயின.

தற்போது கடும் கடல் அரிப்பின் காரணமாக மணல் திட்டு கரைந்து அந்த கட்டிடத்தின் சுவர்கள் வெளியில் தெரிகின்றன. கடல் அரிப்பு தொடர்ந்தால், டேனிஷ் கோட்டையின் சுவர்களை அலைகள் தாக்கும் நிலை ஏற்படும்.

பாதிப்புக்குள்ளாகும்

கி.பி 1620-ம் ஆண்டு டென்மார்க் நாட்டவர் தரங்கம்பாடியை, இந்தியாவில் தங்களது வர்த்தக மையமாக அமைக்க முடிவு செய்தவுடன், அப்போது தஞ்சையை ஆண்ட விஜயரகுநாத நாயக்கரிடம், தரங்கம்பாடியில் ஒரு துறைமுகத்தையும், டேனிஷ் கலை நுணுக்கதுடன் ஒரு பாதுகாப்பு கோட்டையையும் அமைக்க அனுமதி பெற்றனர். 2 ஆண்டு காலத்திற்குள் கி.பி. 1622-ல் கட்டி முடிக்கப்பட்ட அந்த பிரமாண்ட கோட்டை இந்தியாவில் டேனிஷ் வர்த்தக மையத்தின் தலைமை பீடமாக அமைந்தது.

தரங்கம்பாடிக்கு நாள்தோறும் வரும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்த கம்பீர கோட்டையை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். தற்போதைய கடல் அரிப்பால், டேனிஷ் கோட்டைக்கு உடனடி பாதிப்பு இல்லை என்றாலும், இதே நிலை நீடித்தால் கோட்டை பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.

துறைமுக தடுப்பு சுவர் பாதிப்பு

இது தவிர, தரங்கம்பாடியை சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும், கடல் அரிப்பினால் மணல் திட்டுகள் கரைந்து, கடல் நீர் ஊருக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கடல் அரிப்பை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து கோட்டையை காக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் விரும்புகின்றனர்.

ஒரே ஆண்டில் 3 முறை பாதிப்புக்குள்ளான மீன்பிடி துறைமுக தடுப்பு சுவர் புரெவி புயல் காரணமாக கடும் கடல் சீற்றத்தால் தரங்கம்பாடி மீன்பிடி துறைமுக கட்டுமான பகுதியில், கருங்கல் சுவரின் ஒரு பகுதியில் உள்ள கருங்கற்கள் கடலில் அடித்து செல்லப்பட்டன. கடந்த வாரம் ஏற்பட்ட நிவர் புயல் மற்றும் கடந்த மே மாதம் ஏற்பட்ட அம்பன் புயல் ஆகியவற்றாலும் இந்த தடுப்பு சுவர் பாதிக்கப்பட்டது.

ரூ.120 கோடி

தரங்கம்பாடியில் 24 மீனவ கிராமங்கள் பயன்பெறும் வகையில் 6.7 எக்டேர் நிலத்தில் ரூ.120 கோடி செலவில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. கட்டுமான பணிகளின் ஒரு பகுதியாக கடலில் கருங்கற்களை கொண்டு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர் காலங்களில் கடல் சீற்றத்தில் இருந்து துறைமுகத்தை காக்கும் நோக்கில் இந்த தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து 3 புயல்களால் தடுப்பு சுவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுவரின் உயரம் மற்றும் அகலம் குறைவாக இருப்பதே சேதத்திற்கு காரணம் எனவும், சேதம் சரி செய்யப்படும்போது உயரம் மற்றும் அகலத்தை அதிகரித்தால், எதிர்கால இயற்கை சீற்றங்களின்போது பாதிப்புகள் ஏற்படாமல் காக்கலாம் என உள்ளூர் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்