கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த மழை: மலைப்பாதையில் வேரோடு சாய்ந்த மரங்கள்; 2 வீடுகள் சேதம்

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டித்தீர்த்த மழையால், மலைப்பாதையில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. சின்னாளப்பட்டி, வடமதுரை பகுதிகளில் 2 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

Update: 2020-12-05 02:54 GMT
கொடைக்கானல் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டிருப்பதை படத்தில் காணலாம்
போக்குவரத்து தொடக்கம்
‘மலைகளின் இளவரசி‘யான கொடைக்கானல் பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று காலையில் இருந்தே கொடைக்கானலில் மழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

குறிப்பாக 21 அடி உயரம் கொண்ட கொடைக்கானல் பழைய அணையின் நீர்மட்டம் 14.3 அடியாக உயர்ந்தது. இதேபோல 36 அடி உயரம் கொண்ட கொடைக்கானல் புதிய அணையின் நீர்மட்டம் 23 அடியானது.

இந்நிலையில் நேற்று பலத்த மழை பெய்யும் என்று கருதி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஆனால் பகல் நேரத்தில் மழை குறைந்ததின் காரணமாக நேற்று பகல் 1 மணி அளவில் கொடைக்கானல் மலைப்பாதையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

வேரோடு சாய்ந்த மரங்கள்
இதனிடையே மழை காரணமாக பழனி மற்றும் அடுக்கம் மலைப்பாதைகளில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து சென்று அதனை சீரமைத்தனர். இந்த நிலையில் நகரிலுள்ள பழைய அப்பர் லேக் ரோடு மற்றும் மன்னவனூர் செல்லும் சாலையில் பலத்த மழைக்கு மரங்கள் வேரோடு சாய்ந்து மின் வயர்கள் மீது விழுந்தது. இதன் காரணமாக நகர் மற்றும் கிராமப்புறங்களில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மேத்யூ தலைமையில் ஊழியர்கள் விரைந்து சென்று விழுந்து கிடந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்களை அகற்றினர். தொடர்மழை எதிரொலியாக, கொடைக்கானலில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பலத்த காற்றுடன் மழை
இதேபோல் பெரும்பாறை, கே.சி.பட்டி, குப்பமாள்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதில் பெரும்பாறையை அடுத்த கே.சி.பட்டி-கவியக்காடு இடையே செல்லும் மலைப்பாதையில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

மேலும் மஞ்சள்பரப்பு-புல்லாவெளி மலைப்பாதையில் இலவமரம் வேரோடு சாய்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு விரைந்து சென்று அறுவை எந்திரம் மூலம் மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

2 வீடுகள் சேதம்
வடமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு வடமதுரையை அடுத்த புத்தூர் அருகே உள்ள வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகேசன் என்பவருடைய வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த முருகேசன், அவருடைய மனைவி மற்றும் 2 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சின்னாளபட்டி ராமநாதபுரம் பகுதியில் பலத்த மழைக்கு நேற்று முன்தினம் இரவு கூலித்தொழிலாளி பழனிசாமி என்பவருடைய வீட்டின் ஒரு பக்கச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் அவர், அவருடைய மனைவி பாண்டியம்மாள், குழந்தைகள் சூர்யா, ரஞ்சித்குமார் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மேலும் செய்திகள்