கடலூர் மாவட்டத்தில் 9 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு

கடலூர் மாவட்டத்தில் 9 மாதங்களுக்கு பிறகு நேற்று கல்லூரிகள் திறக்கப்பட்டன.

Update: 2020-12-08 03:04 GMT
கடலூர்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவும் வேகம் குறைந்துள்ளதால், மத்திய அரசும், பல்கலைக்கழக மானியக்குழுவின் அறிவுரைப்படி கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு 2-ந் தேதி முதலும், இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு 7-ந் தேதி முதலும் வகுப்புகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கடந்த 2-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வகுப்புகள் தொடக்கம்

இதையடுத்து கலை அறிவியல், தொழில்நுட்பம், என்ஜினீயரிங், வேளாண்மை, மீன்வளம் மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கியது. இதேபோல் மருத்துவ படிப்பில் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான வகுப்புகளும் தொடங்கப்பட்டது.

இதையொட்டி 9 மாதங்களுக்கு பிறகு நேற்று காலை மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு, செயல்பட தொடங்கியது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளும் திறக்கப்பட்டது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கனமழையிலும் வந்த மாணவர்கள்

மாவட்டத்தில் நேற்று காலை கனமழை பெய்த போதிலும், 9 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்ட ஆர்வத்தில் மாணவ- மாணவிகள் மழையை பொருட்படுத்தாமல் கல்லூரிகளுக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் அரசு வகுத்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி முக கவசம் அணிந்தபடி வந்தனர். அவர்களை கல்லூரி நுழைவுவாயிலில் நிறுத்தி சானிடைசர் திரவத்தை பயன்படுத்த வைத்து, பிறகு அவர்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே கல்லூரிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்களும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே கல்லூரிக்குள் சென்றனர்.

வருகை குறைவு

மேலும் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கல்வி கற்கும் வகையில் ஒரு வகுப்பறைக்கு 20 முதல் 25 மாணவர்கள் வரை அமருவதற்கு ஏற்றபடி வசதிகள் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பல மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டபோதிலும் மாணவ- மாணவிகளின் வருகை குறைவாகவே இருந்தது.

மேலும் செய்திகள்