பெரியகுளம் அருகே கல்லாற்றில் திடீர் வெள்ளம்; கார் டிரைவர் பரிதாப சாவு

பெரியகுளம் அருகே கல்லாற்றில் நண்பர்களுடன் குளித்த கார் டிரைவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2020-12-08 05:38 GMT
பெரியகுளம்,

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை தெற்கு புதுத்தெருவை சேர்ந்தவர் செல்லராமு (வயது 36). கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் ராமசாமி உள்பட 5 பேருடன் பெரியகுளம் அடுத்த மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ள கல்லாற்றில் குளிக்க சென்றார். அவர்கள் ஆற்றில் இறங்கி உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் குளித்துக் கொண்டு இருந்த 6 பேரும் அடித்து செல்லப்பட்டனர்.

இதில் 4 பேர் உடனடியாக ஆற்றின் கரையோரத்தில் உள்ள செடி,கொடிகளை பிடித்து கரை ஏறினர். ராமசாமி மட்டும் சிறிது தூரம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு கரையோர மரக்கிளைகளை பிடித்து உயிர்தப்பினார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்தநிலையில் செல்லராமு மட்டும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். அவரை ஆற்று வெள்ளம் அடித்து சென்றது.

உடல் கரை ஒதுங்கியது

இதுகுறித்து உடனடியாக பெரியகுளம் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்லராமுவை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு வரை அவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் செல்லராமுவை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று காலை பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் வராகநதிக்கரை ஓரத்தில் செல்லராமுவின் உடல் ஒதுங்கி கிடந்தது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டனர்.

இதுதொடர்பாக ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லராமுவின் உடலை கைப்பற்றி பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த செல்லராமுவுக்கு மனைவியும், 3 வயதில் மகனும் உள்ளனர். இதனிடையே காயமடைந்த ராமசாமி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்