காரைக்குடி அருகே தார்சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்த முயற்சி - அதிகாரிகள் பேச்சுவார்த்தை

காரைக்குடி அருகே தார்சாலை அமைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

Update: 2020-12-10 13:30 GMT
காரைக்குடி, 

காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சிக்குட்பட்டது டூவார்டு நகர், லட்சுமி நகர், ராகவேந்திரா நகர், வள்ளல் நகர், நேதாஜி நகர். இப்பகுதிகளில் சுமார் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் தார்சாலை வசதி இல்லை. கடந்த சில ஆண்டுகளாக வெறும் மண்சாலையாகவே உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது.

இதனால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இங்கு தார்சாலை அமைக்க வலியுறுத்தி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யாசெந்தில் ஏற்பாட்டின் பேரில் ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து அந்த சாலையை பார்வையிட்டு முதற்கட்டமாக பொக்லைன் எந்திரம் மூலம் சேறும், சகதியுமாக இருந்த சாலையை சீரமைத்து மண் கொட்டும் பணியில் ஈடுபட்டனர். மேலும் விரைவில் தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்..

மேலும் செய்திகள்