தஞ்சை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை கணக்கில் வராத ரூ. 79 ஆயிரம் பறிமுதல்

தஞ்சை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.79 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2020-12-11 04:30 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை-திருச்சி சாலையில் புதிய கலெக்டர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தின் பின்புறம் ஒருங்கிணைந்த பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. நேற்று மாலை 5.45 மணி அளவில் இந்த அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, ஏட்டுகள் அய்யப்பன் கோபி, போலீஸ்காரர் மணிகண்டன் மற்றும் மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலர் கஜேந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் வந்தனர். அங்குள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இரவு 8.45 மணி வரை தொடர்ந்து 3 மணி நேரம் இந்த சோதனை நீடித்தது.

ரூ.79 ஆயிரம் பறிமுதல்

அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் பத்திர எழுத்தர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் என அனைவரிடமும் சோதனை நடத்தினர். 3 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் பத்திர எழுத்தர்கள் ராஜராஜனிடம் இருந்து ரூ.37,500-ம், பிரபாகரனிடம் இருந்து ரூ.14,500-ம், பத்திர எழுத்தர்களின் உதவியாளர்கள் ராஜ்குமாரிடம் இருந்து ரூ.8,800-ம், தேவேந்திரனிடம் இருந்து ரூ.18,200-ம் என கணக்கில் வராத ரூ.79 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த பணத்தை சார் இணைப்பதிவாளர் மற்றும் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார் இணைப்பதிவாளர் இளையராஜா மற்றும் ராஜராஜன், பிரபாகரன், ராஜ்குமார், தேவேந்திரன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

53 ஆவணங்கள் பதிவு

இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் கூறுகையில், “தஞ்சை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச பணம் அதிக அளவில் புழங்குவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தினோம். நேற்று மட்டும் 53 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டது. இதில் லஞ்சமாக கொடுக்க வைத்திருந்த பணம் ரூ.79 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு இளையராஜா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படும்”என்றார்.

மேலும் செய்திகள்