திருப்பூர் மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்க டாக்டர்கள் வேலைநிறுத்தம் 150 தனியார் மருத்துவமனைகள் செயல்படவில்லை

திருப்பூர் மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்க டாக்டர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 150 தனியார் மருத்துவமனைகள் செயல்படவில்லை.

Update: 2020-12-12 10:35 GMT
திருப்பூர், 

ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி மருத்துவம் படித்தவர்கள் அலோபதி மருத்துவ மேற்படிப்பு படித்து அறுவைசிகிச்சை முதலான அனைத்தையும் செய்ய அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் திருப்பூர் கிளையின் சார்பில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நேற்று நடைபெற்றது.

தனியார் மருத்துவமனைகள் கூட்டமைப்பு டாக்டர்கள் வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள், ஸ்கேன் சென்டர்கள் மூடப்பட்டன.

திருப்பூர், பல்லடம், ஊத்துக்குளி, பெருமாநல்லூர், குன்னத்தூர், அவினாசி, பொங்கலூர், கொடுவாய் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் பிரிவு முற்றிலும் நேற்று செயல்படவில்லை.

இந்த பகுதிகளை சேர்ந்த 700 டாக்டர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். 150 தனியார் மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் பிரிவு செயல்படவில்லை.

அவசர சிகிச்சைகள், அவசர அறுவை சிகிச்சைகள், பிரசவ சிகிச்சை பிரிவுகள் மட்டும் வழக்கம்போல் செயல்பட்டது. அரசு டாக்டர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று பணியை மேற்கொண்டனர்.திருப்பூர் மாநகரில் தனியார் மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் பிரிவுகள் நேற்று செயல்படாததால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் சிரமம் அடைந்தனர். இதுபோல் மாவட்டம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளின் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்