வேலை இல்லாத விரக்தியில், மகனுடன் என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை; ஈமசடங்கிற்கு ரூ.3 ஆயிரம் வைத்து சென்ற சோகம்

வேலை இல்லாத விரக்தியில் மகனுடன் சிவில் என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை செய்தார். ஈமசடங்கு செலவுக்கு ரூ.3 ஆயிரம் வைத்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

Update: 2020-12-15 00:28 GMT
தற்கொலை செய்த பாரி, மகன் பாலமுருகன் ஆகியோருடன் ராஜபாலம்பிகா உள்ளார்.
சிவில் என்ஜினீயர்கள்
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் பாலாஜி நகர் 6-வது தெருவில் வசித்து வந்தவர் பாரி என்ற பரிமளம் (வயது 45). சிவில் என்ஜினீயர். இவருடைய மனைவி ராஜபாலம்பிகா (40). இவரும், சிவில் என்ஜினீயர். இவர்களுக்கு பாலமுருகன் (10) என்ற மகன் இருந்தான்.

கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆதம்பாக்கம் இன்காம்டாக்ஸ் காலனி 1-வது தெருவில் ராஜபாலம்பிகா, தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். பாலமுருகன், ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

கட்டிப்பிடித்த நிலையில்...
ராஜபாலம்பிகா நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவரது மகன் பாலமுருகன் மட்டும் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த பாரி, மகனை தான் வசிக்கும் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அப்போது மெரினா கடற்கரைக்கு செல்ல வேண்டும் என தந்தையிடம் பாலமுருகன் கூறியதாக தெரிகிறது.

இந்தநிலையில் பாரி வீட்டில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது வீட்டில் இருந்து தீ புகை ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

இதனால் ஆதம்பாக்கம் போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். கிண்டி, வேளச்சேரி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 

அப்போது வீட்டின் உள்ளே தந்தை-மகன் இருவரும் கட்டிப்பிடித்த நிலையில் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர்.

ஈமசடங்கிற்கு ரூ.3 ஆயிரம்
இதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த ராஜபாலம்பிகா, தனது கணவர் மற்றும் மகனின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. 

அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர்.

ஆதம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து தந்தை, மகன் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய 

விசாரணையின்போது, முன்னதாக தனது வீட்டின் உரிமையாளரின் மகன் மணிகண்டனிடம் பாரி ஒரு கவர் தந்து உள்ளார். அந்த கவரை கைப்பற்றிய போலீசார் பிரித்து பார்த்தனர்.

அதில் ரூ.3 ஆயிரம் இருந்தது. அந்த கவரில், அந்த பணத்தை தனது ஈம சடங்கு செலவுக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

மகனுடன் தற்கொலை
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், வேலை இல்லாமல் இருந்த பாரி, அடிக்கடி தனது மனைவியிடம் செலவுக்கு பணம் வாங்கி வந்ததாக தெரிகிறது. மேலும் பலரிடம் கடன் பெற்றதாகவும் தெரிகிறது.

அத்துடன் குடும்ப பிரச்சினையில் மனைவியும் பிரிந்து இருப்பதால் விரக்தி அடைந்த பாரி, தனது மகனுடன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து இருக்கலாம் என தெரியவந்தது. அவரது வீட்டில் தடவியல் நிபுணர் சோபியா ஆய்வு செய்தார். மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மகனுடன் சிவில் என்ஜினீயர் தற்கொலை செய்த சம்பவம் ஆதம்பாக்கம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்