பேச்சிப்பாறை அணையில் தூர்வாரும் பணி எப்போது? குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி

பேச்சிப்பாறை அணையில் தூர்வாரும் பணி எப்போது தொடங்கும்? என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.

Update: 2020-12-18 04:36 GMT
நாகர்கோவில், 

குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நேற்று நடந்தது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் அரவிந்த் தலைமையில் காணொலி காட்சி மூலம் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சத்யஜோஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வாணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வசந்தி, துணை இயக்குனர் (தோட்டக்கலை) ஷீலா ஜாண், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் (பொறுப்பு) சொர்ணலதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, விவசாய சங்க பிரதிநிதிகள் செல்லப்பா, பத்மதாஸ், விஜி, முருகேசபிள்ளை உள்ளிட்டோர் குருந்தங்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்தும், பொன்னுலிங்க அய்யன், பெரியநாடார் உள்ளிட்டோர் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள ராஜாக்கமங்கலம் வட்டார உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்தும் கலந்து கொண்டனர். இதேபோல் பூதப்பாண்டி, கொட்டாரம், தக்கலை, திருவட்டார், கிள்ளியூர், மேல்புறம், முன்சிறை பகுதிகளில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் வைத்த கோரிக்கை விவரம் வருமாறு:-

வண்டல் மண்

வேளாண்மை பொறியியல் துறை மூலம் மானிய விலை உபகரணங்கள் 40 சதவீத மானியத்தில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. எனவே இதனை 100 சதவீத மானியத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதியில் மேய்ச்சல் நிலங்களில் மாடு மேய்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும். நீர்நிலைகளில் நில அளவீடு செய்யும்போது எல்லைக்கல் போட வேண்டும். மின்வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படவில்லை. எனவே மீண்டும் இந்த கூட்டத்தை நடத்த வேண்டும்.

ரியல் எஸ்டேட் தொழில் நடைபெறுவதற்கு உள்ளாட்சி நிர்வாகங்கள், பிளான் அப்ரூவல் வழங்கும முன் மாவட்ட கலெக்டரின் அனுமதியை பெறவேண்டும். குத்தகை விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தோட்டக்கலை பழச்செடிகளை 9 வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விற்பனை செய்ய வேண்டும். குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை. ஐகோர்ட்டில் வழக்கு நடைபெறுவதை காரணம் காட்டி வழங்கப்படாமல் இருக்கிறது. எனவே குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்.

ரூ.500 கோடி ஒதுக்கீடு

பேச்சிப்பாறை அணையில் தூர்வாரும் பணிக்கான கோப்பு என்ன நிலையில் உள்ளது?, பணிகள் எப்போது தொடங்கும். நெய்யாறு இடதுகரை கால்வாயில் கேரள மாநிலம் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்துவரும் வழக்கில் குமரி மாவட்ட அதிகாரிகள் தேவையான ஆவணங்களை கொடுக்கவில்லை என்று செய்திகள் வந்துள்ளன. ஏன் இந்த தவறு நடந்தது? என்பதை அதிகாரிகள் விளக்க வேண்டும். அடுத்த வழக்கு விசாரணையின் போதாவது தேவையான ஆவணங்களை அதிகாரிகள் வழங்க வேண்டும்.

குமரி மாவட்ட குளங்கள் மற்றும் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கவும், புதிய தடுப்பணைகள் கட்டுவது உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று அரசுக்கு சிபாரிசு செய்ய வேண்டும். பொதுப்பணித்துறைக்கு முன்பிருந்தது போல தனி சர்வேயர்களை நியமிக்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.

சுற்றுச்சூழல் அனுமதி

அதிகாரிகள்:- வேளாண்மை பொறியியல் துறை மூலம் முழு மானியத்தில் வேளாண் உபகரணங்கள் வழங்குவது தொடர்பாக பிற மாவட்டங்களில் உள்ள நடைமுறைகளை விசாரித்து தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும். நீர் நிலைகளில் நில அளவு செய்யும்போது எல்லைக்கல் போட பொதுப்பணித்துறைக்கு அரசு நிதி ஒதுக்கவில்லை. பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சொந்த பணத்தை செலவு செய்துதான் எல்லைக்கற்கள் போட்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணையில் தூர்வாருவது தொடர்பாக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கோரப்பட்டுள்ளது.

கலெக்டர் அரவிந்த்:- குளங்களை தூர்வாரி வண்டல் மண் எடுப்பது தொடர்பான கோர்ட்டு வழக்கு குறித்து அரசு வக்கீலிடம் விவரம் கேட்டு, அனுமதி கொடுப்பது குறித்து நான்கைந்து தினங்களில் அறிவிப்பு வெளியிடப்படும். இதேபோல் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் வைத்துள்ள கோரிக்கைகள் குறித்தும் பரிசீலனை செய்யப்படும் என்றார்.

இந்த கூட்டத்தின் போது அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டதாலும், அடிக்கடி சிக்னல் கிடைக்காததாலும் காணொலி காட்சி மூலம் அதிகாரிகள் பேசியதை கேட்க முடியவில்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்