கள்ளக்குறிச்சி அருகே, ஏரியில் தண்ணீர் நிரப்பக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி அருகே நிறைமதி ஏரியில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கக்கோரி கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2020-12-20 12:20 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே நிறைமதி கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஆனால் ஏரிக்கு போதுமான தண்ணீர் வருவதில்லை.

கடந்த ஒரு மாதமாக பெய்த பருவமழையி்ன்போதும் ஏரியை சுற்றியுள்ள குளங்கள், ஏரிகள் நிரம்பிய போதிலும் இந்த ஏரி நிரம்பவில்லை. இதனால் ஏரியை நம்பி இருந்து விவசாயிகள் சம்பா நெல்சாகுபடி செய்ய முடியாமல் உள்ளனர்.

இந்த நிலையில் அருகிலுள்ள நீலமங்கலம் ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. எனவே இந்த ஏரியிலிருந்து வழிந்தோடும் உபரி நீரை நிறைமதி எரிக்கு கொண்டு செல்ல வாய்க்கால் அமைத்து தர வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரிடம் கிராம மக்கள் மனுகொடுத்தனர். இதை அடுத்து குறிப்பிட்ட ஏரியை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை நிறைமதி கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நீலமங்கலம் ஏரியிலிருந்து நிரம்பி வழியும் உபரி நீரை நிறைமதி ஏரிக்கு வாய்க்கால் அமைத்து தரக்கோரி ஏரியின் அருகே கள்ளக்குறிச்சி-கூத்தக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி தாசில்தார் பிரபாகர், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வினோதினி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாதாமரை பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது நீலமங்கலம் ஏரியிலிருந்து நிரம்பி வழியும் தண்ணீரை நிறைமதி ஏரிக்கு கொண்டு வர வாய்க்கால் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை அடுத்து கிராமமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.

மேலும் செய்திகள்