ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2020-12-21 02:15 GMT
பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள்.

இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது. நேற்று காலை 10 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தை கர்நாடகா-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள்

இந்தநிலையில் நேற்று விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் நண்பர்கள், குடும்பத்தினருடன் அவர்கள் பரிசலில் சென்றனர்.

ஒகேனக்கல்லில் கடைகள், ஓட்டல்களில் விற்பனை படுஜோராக நடைபெற்றது. சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போலீசார் மெயின் அருவி, தொங்கு பாலம், நடைபாதை மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்