தீபாவளியன்று மதுரை ஜவுளிக்கடையில் தீயை அணைக்கச்சென்று பலியான தீயணைப்பு வீரர் மனைவி தற்கொலை; விபரீத முடிவை தேடியது ஏன்? உருக்கமான தகவல்கள்

தீபாவளியன்று மதுரை ஜவுளிக்கடையில் தீயை அணைக்க சென்று பலியான தீயணைப்பு வீரரின் மனைவி சோகம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார். அவர் இ்ந்த விபரீத முடிவை தேடிக்ெகாண்டது ஏன்? என்பது தொடர்பாக உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2020-12-22 01:51 GMT
தீயணைப்பு வீரர் சிவராஜா, அவரது மனைவி அங்கயற்கண்ணி குழந்தைகளுடன் எடுத்து கொண்ட பழைய படம்.
தீயணைப்பு வீரர் பலி
கடந்த மாதம் 14-ந் தேதி தீபாவளியன்று அதிகாலையில் மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயினை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிரமாக போராடினர். அப்போது அங்கு யாரும் எதிர்பாராத விதமாக அங்குள்ள சுவர் இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. அதில் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த தீயணைப்பு வீரர்கள் சிவராஜா, கிரு‌‌ஷ்ண மூர்த்தி ஆகிய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர்.

அதில் சிவராஜா (வயது38), மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள கே.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர். அவருக்கு அங்கயற்கண்ணி (29) என்ற மனைவியும், 6 வயதில் ஹர்‌‌ஷன், ஒரு வயதில் சன்பீன் என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சிவராஜாவின் மரணத்தை தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.25 லட்சமும், தீயணைப்புத்துறையினர் சார்பில் ரூ.50 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. இந்த நிதி குழந்தைகளின் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அது தவிர அங்கயற்கண்ணிக்கு தீயணைப்புத்துறையில் வேலை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன. மேலும் அரசு நிவாரண தொகையை சென்னையில் முதல்-அமைச்சரிடம் இருந்து அங்கயற்கண்ணி பெற்றிருந்தார்.

குழந்தைக்கு உணவு
கணவர் சிவராஜா இறந்ததை தாங்க முடியாமல் அங்கயற்கண்ணி மிகுந்த சோகத்தில் இருந்து வந்துள்ளார். அந்த சம்பவத்துக்கு பின்பு மற்றவர்களிடம் பேசுவதையும் தவிர்த்துள்ளார். கணவன் இறந்த பின்பு, செக்கானூரணி பாறைப்பட்டியில் உள்ள தனது மாமனார் இல்லத்தில் தங்கி இருந்தார். ஆனால் கடந்த ஒரு வாரமாக கணவனை நினைத்து பித்து பிடித்தது போல், எனது கணவரை பார்க்க வேண்டும் என்று கூறி வந்துள்ளார்.

எனவே அவரது மாமனார் குடும்பத்தினர், அங்கயற்கண்ணியை நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இங்கு வந்தும் அங்கயற்கண்ணி, யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்துள்ளார்.

இதற்கிடையில் நேற்று அங்கயற்கண்ணியின் மூத்த மகன் ‌‌ஹர்‌‌ஷனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் வீட்டில் இருந்தவர்கள் ஹர்‌‌ஷனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். வீட்டில் அங்கயற்கண்ணி, அவரது பெரியம்மா மற்றும் ஒரு வயது குழந்தை சன்பீன் மட்டும் இருந்துள்ளனர்.

காலை 10.45 மணியளவில் குழந்தைக்கு வீட்டின் வெளியே நின்று அங்கயற்கண்ணியும், அவரது பெரியம்மாவும் உணவு கொடுத்து கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில் அங்கயற்கண்ணி திடீரென்று வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டுள்ளார். உடை மாற்ற உள்ளே சென்று இருக்கிறார் என்று எண்ணிய அவரது பெரியம்மா தொடர்ந்து குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டு இருந்தார்.

தற்கொலை
ஆனால் வீட்டிற்குள் சென்ற அங்கயற்கண்ணி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. எனவே சந்தேகம் அடைந்த அவரது பெரியம்மா வீட்டின் கதவை தட்டி பார்த்தார். ஆனால் திறக்கவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவர், உதவிக்கு அக்கம்பக்கத்தினரை அழைத்தார். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து சென்று உள்ளே பார்த்தனர். அப்போது அங்கயற்கண்ணி, தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். அதனால் பதற்றம் அடைந்த அவர்கள் அங்கயற்கண்ணியை அங்கிருந்து மீட்டு திருப்பரங்குன்றம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைவாக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அங்கயற்கண்ணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். எனவே அவரது உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் தலைமையில் போலீசார் தங்களது விசாரணையை தொடங்கினர்.

மேலும் செய்திகள்