தீக்குளிப்பு சம்பவங்களை தடுக்க வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிப்பு சம்பவங்களை தடுக்கும்விதமாக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Update: 2020-12-23 05:38 GMT
வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், சமூக நலத்துறை அலுவலகம், இ-சேவை மையம் உள்பட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.

மனு அளிக்க வரும் பொதுமக்களை நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கிறார்கள். ஆனாலும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயன்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கே.வி.குப்பம் அருகேயுள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான தினகரன் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடும் சோதனைக்கு பின்னரும் தீக்குளிக்க முயன்ற சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில், கலெக்டர் அலுவலக பின்பக்க நுழைவுவாயில் அருகே மண்எண்ணெய் பாட்டிலை மறைத்து வைத்து விட்டு, தினகரன் தனது மனைவி, மகளுடன் நுழைவு வாயில் வழியாக கலெக்டர் அலுவலகம் வந்துள்ளார். பின்னர் அங்கு சென்று மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து வந்து தீக்குளிக்க முயன்றது தெரிய வந்தது.

கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

அதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிப்பு சம்பவங்களை தடுக்கும் பொருட்டு நேற்று முதல் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் சட்டம் -ஒழுங்கு மற்றும் ஆயுதப்படையை சேர்ந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ேநற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அரசு ஊழியர்கள் அவர்களது அடையாள அட்டையை காண்பித்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். அதேபோன்று இருசக்கர வாகனங்கள் சோதனையிடப்பட்டு, அவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டன.

இதேபோல் பின்பக்க நுழைவு வாயிலில் 2 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், கலெக்டர் அலுவலகக்தில் தீக்குளிப்பு சம்பவங்களை தடுக்க ஆண், பெண் போலீசார் 15 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்கும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்