ஆன்லைன் மூலம் வணிக உரிமம் பெறும் வசதி - அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கிவைத்தார்

ஆன்லைன் மூலம் வணிக உரிமம் பெறும் வசதியை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கிவைத்தார்.

Update: 2020-12-24 01:09 GMT
புதுச்சேரி,

புதுவையில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளின் செயல்பாடுகளை கணினி மயமாக்கும் பணிகள் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சொத்துவரி, வீட்டுவரி போன்றவற்றை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி உள்ளது.

அதன் தொடர்ச்சியாக தொழில்முனைவோர், தொழிற்சாலைகள், மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டு வரும் வணிக உரிமத்தை இணையதளம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் புதிய வணிக உரிமம் மற்றும் பழைய வணிக உரிமத்தை புதுப்பித்தல் ஆகியவற்றுக்கு www.lgrams.py.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய சேவையை உள்ளாட்சித்துறை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்கண்ணன், வர்த்தக சபை தலைவர் செண்பகராஜன், வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கரன், மேட்டுப்பாளையம் சேம்பர் ஆப் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் திருமால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் தற்போது 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபார நிறுவனங்கள் வணிக உரிமங்கள் பெற்று வியாபாரம் செய்து வருகின்றன. புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளில் மட்டும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வணிக உரிமங்களுடன் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்த இணையதள சேவையின் மூலம் தொழில்முனைவோர், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியோர் வணிக உரிமங்களை இணையதளத்தின் மூலம் விரைவாக பெற்று பயனடைய முடியும். இதற்காக அலுவலகத்துக்கு நேரில் வரவேண்டிய அவசியம் இல்லை.

மேலும் வணிக உரிமங்கள் வழங்குவதன் மூலம் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்கு கிடைக்கப்பெறும் வரிவருவாய் அதிகரிப்பதோடு அனைத்து தொழில் மற்றும் வணிக நிறுவனங்களும் வெளிப்படைத்தன்மையுடன் எளிய முறையில் வணிக உரிமம் பெற ஏதுவாக அமையும். வரும் காலங்களில் உள்ளாட்சி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரி மற்றும் கட்டணங்களை கைபேசி மூலம் செலுத்துவதற்கு பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் முறையில் பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

மேலும் செய்திகள்