மீளா துயரத்தை ஏற்படுத்திய சுனாமி நினைவு தினம்: கடற்கரை கிராமங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம்

சுனாமி பேரழிவின் 16-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடந்தது. இறந்தவர்களின் நினைவிடத்தில் உறவினர்கள் கண்ணீருடன் அஞ்சலி ெசலுத்தினர்.

Update: 2020-12-27 04:38 GMT
குளச்சல்,

2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலையால் தமிழக கடற்கரை பகுதியில் பேரழிவு ஏற்பட்டது. குமரி மாவட்டத்தில் குளச்சல், கன்னியாகுமரி போன்ற கடற்கரை கிராமங்களில் ஏராளமானோர் இறந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் தங்களின் உறவினர்களையும், உடமைகளையும் இழந்து தவித்தனர்.

ஆழிப்பேரலை கோர தாண்டவத்தின் 16-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கடற்கரை கிராமங்களில் நினைவு திருப்பலி மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் மற்றும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கொட்டில்பாடு

குளச்சல் அருகே கொட்டில்பாடு மீனவர் கிராமத்தில் சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கே.எஸ்.எஸ்.எஸ். சுனாமி காலனியில் இருந்து கொட்டில்பாடு வரை ஊர்வலம் நடந்தது. பங்குத்தந்தை ராஜ் தலைமை தாங்கினார். இறந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் ஏராளமானோர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் மேற்கு கடற்கரை வழியாக கொட்டில்பாடு ெசன்றடைந்ததும் அங்கு இறந்தவர்களின் நினைவிடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை நடந்தது.

பின்னர் புனித அல்லேசியார் ஆலயத்தில் சிறப்பு நினைவு திருப்பலி நடந்தது. தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு ஸ்தூபியில் மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சிகளில் தெற்காசிய மீனவர் தோழமை கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சர்ச்சில், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சுனாமி நினைவு நாளை முன்னிட்டு நேற்று கொட்டில்பாடு மீனவர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

குளச்சல்

குளச்சலில் சுனாமியால் பலியானவர்களின் நினைவாக புனித காணிக்கை அன்னை திருத்தல வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் பங்குத்தந்தை மரிய செல்வன் தலைமையில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மணக்குடி

மணக்குடி புனித அந்திரேயா ஆலயத்தில் பங்குதந்தை யூஜின் தலைமையில் நேற்று காலையில் சுனாமியால் இறந்தவர்களுக்காக நினைவு திருப்பலி நடந்தது. பின்னர் ஆலயத்தில் இருந்து பங்குதந்தை தலைமையில் மவுன ஊர்வலமாக புறப்பட்டு இறந்தவர்களின் நினைவிடத்தை சென்றடைந்தனர். நினைவிடத்தை மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதில் இறந்தவர்களின் உறவினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்