தேவர்குளம் அருகே ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம் ஆன்லைன் மூலம் ரூ.7 லட்சம் மோசடி

தேவர்குளம் அருகே ஓய்வுபெற்ற வங்கி ேமலாளரிடம் ஆன்லைன் மூலம் ரூ.7 லட்சத்தை மர்மநபர் மோசடி செய்தார்.

Update: 2020-12-30 02:24 GMT
பனவடலிசத்திரம்,

தேவர்குளம் அருகே உள்ள மேலஇலந்தைகுளம் சி.எஸ்.ஐ. சர்ச் தெருவை சேர்ந்தவர் உமா சங்கர் (வயது 67). ஓய்வுபெற்ற வங்கி மேலாளர். இவர் தனது வங்கிக்கணக்கில் ரூ.7 லட்சத்து 8 ஆயிரம் இருப்பு வைத்திருந்தார். இவர் தனது செல்போன் மூலம் வங்கி பரிவர்த்தனைகளை செய்துகொண்டிருந்தார்.

இந்தநிலையில் அவரது செல்போனுக்கு வங்கி பரிவர்த்தனை குறித்து அப்டேட் செய்யுமாறு ஒரு விளம்பரம் வந்துள்ளது. இதையடுத்து அதை அப்டேட் செய்துவிட்டு தனது வங்கிக்கணக்கில் இருந்து சிறிதளவு பணம் எடுப்பதற்காக பரிவர்த்தனை செயலிக்குள் நுழைந்தார்.

ரூ.7 லட்சம் மோசடி

அதற்குள் எந்த அக்கவுண்டுக்கு பணம் அனுப்ப வேண்டும், எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் என்று இவர் தகவல் அனுப்புவதற்கு முன்பாகவே தானாகவே அந்த செயலி (ஆப்) செயல்பட தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த உமாசங்கர் செல்போன் பரிவர்த்தனையை நிறுத்தினார். பின்பு அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்று தனது வங்கிக்கணக்கை சரி பார்த்தார். அப்போது அவரது வங்கிக்கணக்கில் இருந்து முதலில் 3 லட்சம் ரூபாயும், அதன்பின்னர் 4 லட்சத்து 8 ஆயிரம் ரூபாயும் கணக்கிற்கு சென்று விட்டது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த உமாசங்கர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று தனது கணக்கை சரிபார்த்தார். அப்போது அவரது வங்கிக்கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் 7 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.

போலீசில் புகார்

இதுகுறித்து வங்கியிடம் தெரிவித்தார். ஆனால் வங்கி நிர்வாகம், நீங்கள் பயன்படுத்திய செயலி வங்கி நிர்வகிக்கும் வங்கி பரிவர்த்தனை செயலி அல்ல. எனவே இதுகுறித்து நாங்கள் எதுவும் செய்ய இயலாது என்று கூறிவிட்டனர். பின்னர் இதுபற்றி உமாசங்கர், தேவர்குளம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரங்கசாமி வழக்குப்பதிவு செய்து, ஆன்லைன் மூலம் மோசடி செய்த மர்ம நபர் யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்