தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கமல்ஹாசன் நாளை தேர்தல் பிரசாரம்

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கமல்ஹாசன் நாளை (செவ்வாய்க்கிழமை) சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

Update: 2021-01-04 03:49 GMT
கிருஷ்ணகிரி,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலையொட்டி சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் செய்யும் அவர் நாளை (செவ்வாய்க்கிழமை) தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.

அதன்படி காலை 11.30 மணிக்கு தர்மபுரி அன்னசாகரம் பகுதியில் வசிக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ராணுவ படையில் பணியாற்றிய சிவகாமி அம்மாளை நேரில் சந்தித்து பேசுகிறார். இதைதொடர்ந்து 11.45 மணிக்கு தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். பின்னர் 12 மணிக்கு தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள், பெண்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோருடன் கலந்துரையாடுகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம்

தொடர்ந்து மாலை 3 மணிக்கு பென்னாகரம் பஸ் நிலையத்திலும், 3.30 மணிக்கு பாப்பாரப்பட்டி பஸ் நிலையத்திலும், 4 மணிக்கு பாலக்கோடு பஸ் நிலையத்திலும் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். தொடர்ந்து நாளை 4.30 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்திலும், 5 மணிக்கு கிருஷ்ணகிரியிலும், 5.30 மணிக்கு சூளகிரியிலும், 6 மணிக்கு ஓசூரிலும் பொதுமக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசுகிறார்.

இதுதொடர்பாக தர்மபுரி மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயலாளர் எஸ்.கே.ஜெய வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்து நாளை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் பகுதிகளில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பெண்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பான வரவேற்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த பிரசார கூட்டங்களில் பொதுமக்கள் முக கவசத்துடன் கலந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்