சிவகிரி அருகே மான் வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.4½ லட்சம் அபராதம்; நாட்டுத்துப்பாக்கி- மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்

சிவகிரி அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்து மான் வேட்டையாடியாய 3 பேருக்கு ரூ.4½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-01-05 02:28 GMT
சிவகிரி அருகே மான் வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் பிடித்து வந்தபோது எடுத்த படம்
வனத்துறையினர் ரோந்து
சிவகிரிக்கு மேற்கே வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடி இறைச்சியை கடத்தி செல்வதாக மாவட்ட வன அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவின்பேரில் சிவகிரி வனச்சரகர் சுரேஷ் தலைமையில் சிவகிரி வடக்கு ப்பிரிவு தலைவர் முருகன், வனக்காப்பாளர்கள் ராஜூ, சுதாகர், இம்மானுவேல், பாரதி கண்ணன், வேட்டை வனக்காவலர் அருண்குமார், வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஆனந்தன், பாலசுப்பிரமணியன், மாரியப்பன், லோகநாதன் ஆகியோர் ரோந்து சென்றனர்.

மான் வேட்டை
அப்போது தேவியார் பீட் எல்கைக்குட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா சோலைசேரி கிருஷ்ணாபுரம் சுப்பிரமணிய கோவில் தெருவை சேர்ந்த மாடசாமி (வயது 51), மாடசாமி மகன் அருண்குமார் (23), காவுக்கனி மகன் பிரகாஷ் (28), ராஜபாளையம் தாலுகா கோவிலூர் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்த ராமர் (45), செல்வம் (50), சிவகிரி அருகே தேவிபட்டணம் மேலூர் ராமசாமியாபுரத்தை சேர்ந்த தங்கச்சாமி மகன் சின்னராஜூ, சமுத்திரம் மகன் சக்திவேலு (35) ஆகிய 7 பேர் சேர்ந்து தேவிபட்டணம்பகுதியில் நாட்டுத்துப்பாக்கியை வைத்து மானை வேட்டையாடிகொன்று அதன் இறைச்சியை தென்னந்தோப்பில் பங்கு போட்டு கொண்டு இருந்தது தெரியவந்தது. அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது ராமர், சின்னராஜூ, செல்வம், சக்திவேலு ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். இவர்களில் மாடசாமி, அருண்குமார், பிரகாஷ் ஆகியோரை பிடித்து சிவகிரி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

ரூ.4½ லட்சம் அபராதம்
இவர்களிடம் வன விலங்குகளை வேட்டையாட பயண்படுத்திய நாட்டுத்துப்பாக்கி, வெடிமருந்து, தோட்டா தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்கள், கத்தி, அரிவாள், 2 ேமாட்டார்சைக்கிள்கள், மான் 
இறைச்சி ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் 3 பேருக்கும் தலா 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதித்தனர். தலைமறைவாக உள்ள 4 பேரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்