அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏ.சி. எந்திரம் வெடித்ததால் தீ விபத்து ஆய்வகத்தில் ரூ.20 லட்சம் பொருட்கள் சேதம்

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏ.சி. எந்திரம் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் ஆய்வகத்தில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

Update: 2021-01-05 05:08 GMT
விக்கிரவாண்டி,

விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இதில் 2- வது மாடியில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைந்துள்ளது. நேற்று அதிகாலை ஆர்.என்.ஏ. கண்டறியும் ஆய்வகத்தில் இருந்த ஏ.சி. எந்திரம் வெடித்து சிதறியது. இதனால் ஆய்வகம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. ஆய்வகத்தில் ஆல்கஹால் கலந்த சோதனை மாதிரிகள் அதிகம் இருந்ததால், அவை வெடித்து புகைமூட்டமாக காட்சி அளித்தது.

ரூ.20 லட்சம் பொருட்கள் சேதம்

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விழுப்புரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து 2 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும் இந்த தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான ஆய்வக உபகரணங்கள் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்