14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்து ஊழியர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் நேற்று நடந்தது.

Update: 2021-01-06 01:49 GMT
தாம்பரம்,

தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி வரும் 1 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் ஊதியம், பல்வேறு படிகள் மற்றும் பணி உயர்வு ஆகியவற்றுக்கு தீர்வு காணும் வகையில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தப்படுவது வழக்கம்.

இதன்படி 13-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருந்தால், தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை ஊதிய உயர்வு கிடைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் அரசு சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்படாததாலும், கொரோனா பொதுமுடக்கம் காரணமாகவும் பேச்சுவார்த்தை தாமதமானதாக தெரிகிறது.

67 தொழிற்சங்கங்கள்

இதையடுத்து, 14-வது ஊதியக்குழு குறித்து பேச்சுவார்த்தை நடத்தக்கோரி கடந்த டிசம்பர் 1-ந் தேதி தொ.மு.ச., சி.ஐ.டியூ., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் சென்னை பல்லவன் இல்லத்தில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டிசம்பர் 17-ந் தேதி வேலைநிறுத்தம் செய்ய ஊழியர்கள் முடிவு செய்தனர்.

இந்தநிலையில், அரசு பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டு அதற்கான தேதியை அறிவித்தது. அதன்படி சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி நிலையத்தில் 14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. போக்குவரத்து துறை செயலாளர் சி.சமயமூர்த்தி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினர்- செயலாளர் இளங்கோவன், நிர்வாகத்தரப்பு குழு மற்றும் துணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் 67 தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்