பறவை காய்ச்சல் எதிரொலி: சென்னையில் இறைச்சி கடைகள் தீவிர கண்காணிப்பு

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக சென்னையில் இறைச்சி கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Update: 2021-01-07 23:04 GMT
கோழி இறைச்சி கடை
பறவை காய்ச்சல்
கேரளாவில் பறவை காய்ச்சல் காரணமாக பல ஆயிரக்கணக்கான கோழிகள் மற்றும் வாத்துகள் இறந்து வருகின்றன. இந்த பறவை காய்ச்சல் தமிழகத்துக்கு பரவாமல் இருக்க கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துகளை தமிழகத்துக்கு ஏற்றி வரும் வாகனங்களை கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தப்பட்ட பின்னர்தான் தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

சென்னையில் விற்கப்படும் கோழிகள் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படுவதால் இங்கு பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க சென்னை மாநகராட்சி கால்நடைத்துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் இணைந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். 

இதுகுறித்து மாநகராட்சி கால்நடைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தீவிர கண்காணிப்பு
பறவை காய்ச்சல் காரணமாக மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள கோழி இறைச்சி கடைகள் மண்டலம் வாரியாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்த கடை உரிமையாளர்களுக்கு, நோய்வாய்பட்ட கோழிகள் அல்லது வாத்துகள் இருந்தால் அதுகுறித்து உடனடியாக மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்குமாறும், அவ்வாறான கோழி இறைச்சிகளை விற்பனை செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நோய்வாய்ப்பட்டு இறக்கும் கோழிகள் ஆய்வகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, எதனால் இறந்தது? என்பது குறித்து ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இறைச்சி கடைகளை கண்காணிக்க கால்நடை துறை ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்