கீழையூர் பகுதியில் பலத்த மழை: அறுவடைக்கு தயாரான 500 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன விவசாயிகள் கவலை

கீழையூர் பகுதியில் பலத்த மழையால் அறுவடைக்கு தயாரான 500 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

Update: 2021-01-08 03:18 GMT
வேளாங்ண்ணி,

நாகை மாவட்டத்தில் நிவர் மற்றும் புரெவி புயல்களால் கடந்த மாதம் 10 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் தேங்கி நின்றது. மேலும் தாழ்வான பகுதியில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. வயல்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் மூழ்கின. இதை தொடர்ந்து மழை நின்று வெயில் அடிக்க தொடங்கியதால் வயல்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றி பயிர்களை விவசாயிகள் காப்பாற்றினர்.

நெற்பயிர்கள் சாய்ந்தன

இந்த நிலையில் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. வயல்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் சாய்ந்தன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

இந்த பலத்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் கீழையூர் ஒன்றிய பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 500 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து விழுந்து முளைக்க தொடங்கி விட்டன. இனிமேல் இந்த பயிர்களை அறுவடை செய்ய முடியாது என்றும், மகசூல் இழப்பு ஏற்படும் என்றும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்