நன்கு சமைத்த கோழி இறைச்சி, முட்டை சாப்பிடலாம் பறவை காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை - கலெக்டர் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை நன்கு சமைத்த கோழி இறைச்சி, முட்டை சாப்பிடலாம் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

Update: 2021-01-10 15:18 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:- தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலும், ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பறவைக்காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுஉள்ளது. இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி, தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

குறிப்பாக அருகாமை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் வரும் வாகனங்களை மாநில எல்லைகளில் கிருமிநாசினி தெளித்த பின்னரே அனுமதிக்கப்படுகிறது. அதேபோல தமிழகத்தில் உள்ள கோழி பண்ணைகள், சந்தைகளை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பிடும்படியாக கோழிப்பண்ணைகள் ஏதும் செயல்படவில்லை. இருப்பினும் மாவட்டத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்களை வனத்துறையினரும், கோழி சந்தைகள் மற்றும் இறைச்சி கடைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் பறவைகளில் அசாதாரணமான கூட்டமாக இறப்பு ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவ அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கவும். பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் பறவைக் காய்ச்சல் தொடர்பாக அச்சமடையத் தேவையில்லை. நன்கு சமைத்த கோழி இறைச்சி, முட்டை உண்பதனால் ஆபத்துகள் ஏதும் இல்லை என கூறினார்.இந்த கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ஏஞ்சலா, துணை இயக்குனர் சுப்பையா பாண்டியன், பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் செந்தில்குமார், இந்திரா, வனச்சரக அலுவலர் சதீஷ் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்