கல்வி கட்டணத்தை குறைக்க கோரி சென்னையில் மருத்துவ மாணவர்கள், பெற்றோர் போராட்டம்; அனைத்து கட்சியினர் பங்கேற்பு

மருத்துவ படிப்பின் கல்வி கட்டணத்தை குறைக்க கோரி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று மருத்துவ மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அனைத்து கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

Update: 2021-01-10 23:14 GMT
சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை படத்தில் காணலாம்.
கல்வி கட்டணம்
ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவ கல்லூரி, ஈரோடு ஐ.ஆர்.டி பெருந்துறை மருத்துவ கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை குறைக்க கோரி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் மருத்துவ மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர், டாக்டர்கள், அனைத்து கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மருத்துவ படிப்பின் கல்வி கட்டணத்தை இதர தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு இணையாக குறைக்க கோரியும், ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரியை டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைக்க வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து கட்சியினர் ஆதரவு
இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன், காங்கிரஸ் எம்.பி விஷ்ணுபிரசாத் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். 

இதையடுத்து சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொது செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவ கல்லூரி, ஈரோடு ஐ.ஆர்.டி மருத்துவ கல்லூரிகளை தமிழக அரசே ஏற்று நடத்துகிறது. ஆனால் இங்கு மாணவர்களின் கல்வி கட்டணத்தை குறைக்கவில்லை. இதனால் ஏழை, எளிய மாணவர்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

போராட்டம் தொடரும்
இது அரசு மருத்துவ கல்லூரி என நம்பிக்கையோடு சேர்ந்த ஏழை, எளிய, நடுத்தர குடும்ப மாணவர்கள் அந்த கட்டணத்தை செலுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள். அதேபோல் தமிழக அரசு அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தனியாரிடம் ஒப்படைக்கப்போவதாக செய்திகள் வருகின்றன.

அரசு தனியாருக்கு துணை போகாமல், மாணவர்களின் நலனுக்காக துணை நிற்க வேண்டும். எங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால், தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரி மாணவர்களும், டாக்டர்களும் இணைந்து நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்