திட்டக்குடி அருகே கோர விபத்து: பள்ளத்தில் கார் கவிழ்ந்து தீப்பிடித்தது; தாய், மகன் உள்பட 3 பேர் பலி

தி்ட்டக்குடி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் தாய், மகன் உள்பட 3 பேர் பலியானார்கள்.

Update: 2021-01-11 05:53 GMT
ராமநத்தம்,

தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 36). இவரது மனைவி செல்வராணி(27). இந்த தம்பதிக்கு ஸ்ரீசாய்ஆத்விக்(5) என்ற மகன் இருக்கிறான். முத்துக்குமார் குடும்பத்துடன் சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்.

இவரும், கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியும்(46) நண்பர்கள். இருவரும் சென்னை அம்பத்தூரில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வந்தனர்.

தடுப்புச்சுவரில் மோதிய கார்

கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்துக்குமார் மற்றும் சுப்பிரமணி குடும்பத்தினர் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். பின்னர் நேற்று மதியம் காரில் சென்னைக்கு புறப்பட்டனர். காரை சுப்பிரமணி ஓட்டினார்.

இவர்களது கார், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கல்லூர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது சுப்பிரமணியின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அங்குள்ள பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி 15 அடி ஆழ பள்ளத்தில் கார் பாய்ந்தது.

தாய், மகன் பலி

அந்த சமயத்தில் கார் கதவுகள் திறந்ததால், முத்துக்குமார், செல்வராணி, ஸ்ரீசாய்ஆத்விக், சுப்பிரமணியின் தாய் முத்துலட்சுமி(70) ஆகிய 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

பள்ளத்தில் பாய்ந்த கார் கவிழ்ந்த சில நொடிகளில் தீப்பிடித்து எரிந்தது. இதில் சுப்பிரமணி உடல் கருகி காரிலேயே பலியானார். மேலும் படுகாயமடைந்த முத்துலட்சுமியும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

மற்றொரு பெண்ணும் சாவு

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செல்வராணி, முத்துக்குமார், ஸ்ரீசாய்ஆத்விக் ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செல்வராணி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக முத்துக்குமாரும், ஸ்ரீசாய் ஆத்விக்கும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

இதனிடையே விபத்தில் பலியான சுப்பிரமணி, முத்துலட்சுமி ஆகிய 2 பேரது உடல் பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து தொடர்பாக ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்