சென்னை அம்பத்தூரில், அரசு மகளிர் பள்ளிக்கூடம் முன்பு மடிக்கணினி வழங்காததை கண்டித்து மாணவிகள் போராட்டம்

மடிக்கணினி வழங்காததை கண்டித்து அம்பத்தூர் அரசு மகளிர் பள்ளிக்கூடம் முன்பு மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-01-11 22:50 GMT
மடிக்கணினி கேட்டு அரசு மகளிர் பள்ளி முன்பு மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது
மடிக்கணினி வழங்கவில்லை
சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரம் சாலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2018-ம் ஆண்டு படித்த மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோருக்கு இன்னும் தமிழக அரசு சார்பில் மடிக்கணினி வழங்கவில்லை என கூறப்படுகிறது..

இது தொடர்பாக 2018-ம் ஆண்டு பிளஸ்-2 படித்து முடித்த மாணவிகள், ‘வாட்ஸ்அப்’ குழு மூலம் ஒருங்கிணைந்து, 2 ஆண்டுகளாக பள்ளி நிர்வாகத்திடம் மடிக்கணினி கேட்டு வந்தனர். ஆனால் அவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் சரியான பதில் வழங்கவில்லை என தெரிகிறது.

மாணவிகள் போராட்டம்
இதையடுத்து அரசு மகளிர் பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், தங்களுக்கு மடிக்கணினி வழங்க கேட்டும் 200-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவிகள், பள்ளியின் நுழைவுவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், “வேண்டும் வேண்டும் மடிக்கணினி வேண்டும்” என கோஷமிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் போலீசார் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொங்கல் பண்டிகை முடிந்ததும் அனைவருக்கும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் மாணவிகள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்