மராட்டியத்தில் மும்பை உள்பட 5 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவியது; தடுப்பு நடவடிக்கை தீவிரம்

மராட்டியத்திலும் பறவை காய்ச்சல் நுழைந்து விட்டது. மும்பை, தானே உள்பட 5 மாவட்டங்களில் பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

Update: 2021-01-12 01:47 GMT
பறவைக்காய்ச்சல்
மத்தியபிரதேசம், ராஜஸ்தான், கேரளா போன்ற மாநிலங்களில் சமீபத்தில் பறவைகள் கொத்து கொத்தாக செத்து விழுந்து பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கு பறவை காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என கருதப்பட்டது. இந்த நிலையில் ராஜஸ்தான், கேரளா, மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம், அரியானா, குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பறவை காய்ச்சல் உறுதியாகி இருந்தது. 

அண்டை மாநிலங்களில் பறவை காய்ச்சல் உறுதியானதை அடுத்து மராட்டிய அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்தது. ஆனாலும் அதற்கு பலனின்றி மராட்டியத்திலும் பறவை காய்ச்சல் நுழைந்து விட்டது.

பர்பானி மாவட்டத்தில்...
இங்குள்ள பர்பானி மாவட்டம் முரும்பா கிராமத்தில் சுயஉதவி குழுவினரால் நடத்தப்படும் பண்ணையில் சமீபத்தில் 900 கோழிகள் செத்து மடிந்தன. இதற்கான காரணம் குறித்து கண்டறிய கோழிகளின் மாதிரிகள் ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவுகளில் கோழிகள் சாவுக்கான காரணம் பறவைக்காய்ச்சல் என்பது தெரியவந்தது.

இதையடுத்து பர்பானி மாவட்ட நிர்வாகம் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது. 

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் முகலிகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தடை
முரும்பா கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் பறவை காய்ச்சல் உறுதியாகி இருப்பதால், தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கையை எடுத்து வருகிறோம். அந்த பண்ணையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள 8 ஆயிரம் கோழிகளை அழிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் 10 கி.மீ. சுற்றளவு பகுதிகள் தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இங்கு இருந்து வேறு எங்கும் கோழிகள் உள்ளிட்ட பறவையினங்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை. மருத்துவ குழுவினர் பறவைக்காய்ச்சல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் முகாமிட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.

லாத்தூர்
இதேபோல லாத்தூரில் உள்ள அகமத்பூர் பகுதியில் கடந்த 2 நாட்களில் 128 கோழிகள் உள்பட 180 பறவைகள் இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பறவைகளின் மாதிரிகளும் ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே மும்பை, தானே, பர்பானி, பீட் ஆகிய மாவட்டங்களில் இறந்து கிடந்த காகங்களின் மாதிரிகள் போபாலில் உள்ள ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

5 மாவட்டங்களில் பரவியது
இந்த நிலையில் மும்பை, தானே, ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள தபோலி, பர்பானி, பீட் ஆகிய 5 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டு இருப்பதாக நேற்று இரவு மராட்டிய அரசு தெரிவித்து உள்ளது.

இதையடுத்து தானேயில் பறவைக்காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னேற்பாடாக அந்த மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையை அமைத்து உள்ளது. கட்டுப்பாட்டு அறையின் மூலம் தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கு பறவை காய்ச்சல் பரவி விடாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

டெல்லியிலும் பரவுகிறது
இதற்கிடையே தலைநகர் டெல்லியிலும் இந்த வைரஸ் தடம் பதித்திருக்கிறது. அங்குள்ள சஞ்சய் ஏரி மற்றும் பூங்காக்களில் ஏராளமான வாத்துகள் மற்றும் காகங்கள் செத்து கிடந்தன. அவற்றின் மாதிரிகளை ஜலந்தரில் உள்ள பரிசோதனைக்கூடத்தில் பரிசோதிக்கப்பட்டன.

இதில் டெல்லியிலும் பறவை காய்ச்சல் பரவுவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

மத்தியக்குழுவினர் ஆய்வு
இதற்கிடையே பறவை காய்ச்சலால் தீவிரமாக பாதிக்கப்பட்டு உள்ள கேரளா மற்றும் இமாசல பிரதேசத்தில் மத்தியக்குழுவினர் முகாமிட்டு உள்ளனர். நோய்த்தொற்று மையங்களாக அறியப்பட்டுள்ள இடங்களை ஆய்வு செய்து வரும் அவர்கள், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு சில மாநிலங்களில் பரவி வரும் பறவை காய்ச்சலால் பறவைகள் மட்டுமே உயிரிழப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மனிதர்கள் யாரும் இதுவரை பாதிக்கப்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மாநிலங்களுக்கு அறிவுரை
எனவே இந்த தொற்று தொடர்பாக தவறான தகவல் பரவுவதை தடுக்குமாறும், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. அதேநேரம் இந்த தொற்று பரவாமல் தடுப்பதை உறுதி செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறிப்பாக நீர் நிலைகள், பறவை சந்தைகள், உயிரியல் பூங்காக்கள், கோழிப்பண்ணைகள் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்தவும், உயிரிழந்த பறவைகளை உடனடியாக சரியான முறையில் அப்புறப்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளது.

பல மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வரும் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

மேலும் செய்திகள்