தேசத்துரோக வழக்கில் நடிகை கங்கனா ரணாவத்தை விசாரிக்க இடைக்கால தடை; போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

நடிகை கங்கனாவை போலீசார் விசாரணைக்கு அழைக்க மும்பை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது.

Update: 2021-01-12 01:54 GMT
கங்கனா ரணாவத்
தேசத்துரோக வழக்கு
நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி ஆகியோர் இருசமூகத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் கருத்து கூறியதாக பாந்திரா போலீசார் அவர்கள் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கோர்ட்டு உத்தரவை அடுத்து போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்து இருந்தனர்.

இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி வழக்கு தொடர்பான விசாரணைக்காக பாந்திரா போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் போலீசார் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு அழைக்க தடை
இந்தநிலையில் தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யகோரி நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று மும்பை ஐகோர்ட்டில் நடந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல், நடிகை கங்கனாவிடம் மேலும் 3 நாட்கள் போலீசார் விசாரணை நடத்த வேண்டி உள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் எஸ்.எஸ். ஷிண்டே, மனிஷ் பிதாலே அடங்கிய அமர்வு மனு மீதான விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு ஒத்தி வைத்தது. மேலும் அதுவரை நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரியை விசாரணைக்கு அழைப்பது, கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க இடைக்கால தடைவிதித்தனர்.

மேலும் செய்திகள்