புதுச்சேரியில் அனைவருக்கும் சுகாதார அடையாள அட்டை; இயக்குனர் மோகன்குமார் தகவல்

புதுவையில் அனைவருக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதாக துறை இயக்குனர் மோகன் குமார் கூறினார்.

Update: 2021-01-12 03:03 GMT
புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், கொரோனா தடுப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரமே‌‌ஷ் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-

சுகாதார அட்டை
ஒவ்வொரு குடிமகனும் தனது சுகாதார அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளவேண்டும். இது மிகவும் அவசியமானதாகும். தங்களுடைய ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

மத்திய அரசு முதன் முதலில் யூனியன் பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு இந்த அடையாள அட்டையை வழங்க உள்ளது. இந்த அட்டையை ஒவ்வொருவரும் தங்களது பெயர், பிறந்த வருடம், செல்போன் எண் அல்லது ஆதார் எண் ஆகியவற்றை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். இந்த விவரங்களை www.healthid.ndhm.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஓரிரு நிமிடங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

செல்போன்-ஆதார்
அனைத்து சுகாதார நிலையங்களிலும் இந்த சேவை நடைபெறுகிறது. இந்த அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வதன் மூலம் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தோடு நேரடி தொடர்பில் இருக்கலாம். ஒரே செல்போன் எண்ணை கொண்டு ஒரு குடும்பத்தில் 10 பேர் பதிவு செய்துகொள்ளலாம். டாக்டர்களும் தங்களைப்பற்றிய விவரங்களை இதில் பதிவு செய்யலாம்.

அரசு, தனியார் டாக்டர்கள், ஸ்கேன் சென்டர்கள், டிஜி டாக்டர் என்ற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். வருங்காலங்களில் இந்த சுகாதார அடையாள அட்டைகளில் சம்பந்தப்பட்டவர்களின் நோய்கள், அவர்களுக்கான சிகிச்சைகள் குறித்த விவரங்களும் இடம்பெற உள்ளன. இதன் மூலம் ஆபத்து காலங்களில் அவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்கவும் வழி கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்