பொள்ளாச்சி பாலியல் வழக்கு கோர்ட்டு அனுமதி கிடைத்ததால் - ஹெரேன்பாலை ரகசிய இடத்தில் வைத்து சி.பி.ஐ. கிடுக்கிப்பிடி விசாரணை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோர்ட்டு அனுமதி கிடைத்ததால் ஹெரேன் பாலை ரகசிய இடத்தில் வைத்து சி.பி.ஐ. கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறது.

Update: 2021-01-12 16:05 GMT
கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சபரிராஜன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து சி.பி.ஐ. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அ.தி.மு.க. நகர மாணவர் அணி முன்னாள் செயலாளர் அருளானந்தம் (வயது 34), பைக் பாபு (27), ஹெரேன் பால் (29) ஆகிய மேலும் 3 பேரை கடந்த 5-ந் தேதி போலீசார் கைது செய்தனர்.

கைதான 3 பேரையும் சி.பி.ஐ. போலீசார் கோவை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 20-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 3 பேரும் ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

கைதான அருளானந்தம், பைக் பாபு, ஹெரேன் பால் ஆகிய 3 பேரை யும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. போலீசார் திட்டமிட்டனர். இதில் முதலில் ஹெரேன் பாலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.ஐ. போலீசார் நேற்று காலை கோவை மகிளா கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

இதற்காக ஹெரேன்பால் கோபி சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். வழக்கை நீதிபதி நந்தினிதேவி விசாரித்தார்.

அப்போது அவர் ஹெரேன்பாலை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். அவரை 13-ந் தேதி (அதாவது நாளை) மதியம் ஹெரேன் பாலை கோர்ட்டில் ஆஜர்படுத்த வும் சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து அவரை போலீசார் பாதுகாப்புடன் ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று துருவித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து பெறப்படும் வாக்குமூலத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்