துமகூரு அருகே சம்பவம் துப்பாக்கி குண்டு பாய்ந்து பெண் சாவு கணவர் சுட்டுக் கொன்றாரா?- போலீஸ் தீவிர விசாரணை

துமகூரு அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து பெண் உயிர் இழந்தார். அவரை, கணவர் சுட்டுக் கொன்றாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-01-13 03:02 GMT
பெங்களூரு, 

துமகூரு மாவட்டம் கெப்பூரு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட டி.கொரட்டகெரே கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 36). இவரது மனைவி சாரதா (32). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கிருஷ்ணப்பாவும், சாரதாவும் காதலித்து திருமணம் செய்திருந்தனர். கிருஷ்ணப்பா சமையல் தொழிலாளியாக வேலை செய்தார். ஆயத்த ஆடை தொழிற்சாலையில் சாரதா வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு நண்பர் ஒருவரிடம் இருந்து கிருஷ்ணப்பா நாட்டு துப்பாக்கியை வாங்கி வந்ததாக தெரிகிறது. வேட்டையாடுவதற்காக, துப்பாக்கி சுட்டும் பழகுவதற்காக, அதனை அவர் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நள்ளிரவில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சாரதா துடித்தார். பின்னர் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பாிதாபமாக உயிர் இழந்தார்.

கணவர் கொலை செய்தாரா?

இதுபற்றி அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கெப்பூரு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சாரதாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் அவரது கணவர் கிருஷ்ணப்பாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது நண்பரிடம் இருந்து வாங்கி வந்த துப்பாக்கியை வேட்டையாடும் போது, எப்படி சுட வேண்டும் என்று மனைவி சாரதாவிடம் சுட்டி காட்டியதாகவும், அந்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக அவர் மீது குண்டு பாய்ந்து இறந்து விட்டதாகவும் போலீசாரிடம் கிருஷ்ணப்பா கூறினார். ஆனால் தனது மகளை கிருஷ்ணப்பா சுட்டுக் கொலை செய்து விட்டதாக சாரதாவின் பெற்றோர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

சமையல் தொழிலாளியான கிருஷ்ணப்பா நண்பரிடம் இருந்து துப்பாக்கியை வாங்கி வந்தது எதற்காக?, துப்பாக்கியை சுடும் போது சாரதா மீது எப்படி குண்டு பாய்ந்தது? மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு நண்பரிடம் இருந்து துப்பாக்கியை வாங்கி வந்து விட்டு நாடகமாடுகிறாரா? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து கிருஷ்ணப்பாவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து கெப்பூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணப்பாவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கெப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்