இரு வேறு விபத்துகளில் 2 பேர் பலி

இரு வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

Update: 2021-01-13 03:55 GMT
பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே சி.ஆர்.பட்டடை கிராமத்தை் சேர்ந்தவர் சேகர் (வயது 65). இவரது மனைவி ஆதிலட்சுமி (58). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்துவிட்டது. இவர்களில் 2-வது மகள் கவிதாவின் மகன் பாலாஜி (25). மகள் கவிதாவும், மருமகனும் இறந்து விட்டதால் சேகர் தனது பேரன் பாலாஜியை அதிக பாசத்துடன் வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் பாலாஜி பள்ளிப்பட்டு அருகே குமாரராஜூபேட்டை கிராமத்தில் இருக்கும் பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் மதுரையை சேர்ந்த நிவிஸ்ரீ (21) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் அரும்பியது. இவர்களது காதலுக்கு நிவிஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி நிவிஸ்ரீ பாலாஜியை திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவரும் பள்ளிப்பட்டு போஸ்ட் ஆபீஸ் தெருவில் வாடகை வீட்டில் தனிக்குடித்தனம் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் பேரனை பார்ப்பதற்காக சேகர் மோட்டார் சைக்கிளில் குமாரராஜூபேட்டை கிராமத்தில் உள்ள பிரியாணி கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். பள்ளிப்பட்டில் இருந்து சோளிங்கர் நோக்கி வேகமாக சென்ற கார் ஒன்று அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

சாவு

இந்த விபத்தில் சேகர் படுகாயம் அடைந்தார். தன்னுடைய கண்ணெதிரே தாத்தா கார் மோதி படுகாயம் அடைந்ததை கண்டு பாலாஜி அதிர்ச்சி அடைந்தார். அவரை சிகிச்சைக்காக பள்ளிப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கும் கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பாலாஜி பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் முத்துவேல் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 51). கூலித்தொழிலாளி. இவர் தனது மனைவியுடன் கிளாம்பாக்கம் கூட்ரோடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரவி பலத்த காயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்