கடலூரை கலக்கிய 2 வழிப்பறி கொள்ளையர்கள் கைது - விருத்தாசலம் போலீசார் அதிரடி

கடலூர் மாவட்டத்தை கலக்கிய 2 வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-01-13 15:39 GMT
விருத்தாசலம்,

கம்மாபுரம் அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் . இவரது மனைவி வசந்தி (வயது 40). கணவர் இறந்து விட்டதால், தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீ்டில் வசித்து வருகிறார். கட்டிட வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று, விருத்தாசலம் பாலக்கரை வந்த வசந்தி, அங்கிருந்து கடைவீதிக்கு செல்ல மணிமுக்தாற்று பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், வசந்தியை வழிமறித்து கத்தி முனையில் 3 பவுன் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேசன், குமரேசன், புஷ்பராாஜ் மற்றும் விருத்தாசலம் உட்கோட்ட குற்றப்பிரிவு தடுப்பு போலீசார் திவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, குப்பநத்தம் புறவழிச்சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி வேகமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் துரத்தி சென்று பிடித்தனர். விசாரணையில் குறிஞ்சிப்பாடி அடுத்த கருங்குழி கிராமத்தை சேர்ந்த கேசவ பெருமாள் மகன் மூட்டைப்பூச்சி என்ற சம்பத்குமார் (29), முருகன் மகன் தமிழ்ச்செல்வன் (21) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து வசந்தியிடம் நகையை பறித்தவர்கள் என்பதும் விசாரணையில் வெளியானது.

மேலும் சம்பத்குமார் மீது சென்னை சேலையூர் போலீஸ் நிலையத்தில் 20 வழக்குளும், 2 பேர் மீதும் கடலூர், மஞ்சக்குப்பம், குறிஞ்சிப்பாடி மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, கொள்ளை வழக்குகள் இருந்து வருகிறது. இருவரும், புதுச்சேரியில் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த போது, போலீசில் சிக்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து சம்பத்குமார், தமிழ்செல்வன் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கத்திகள், ஒரு செல்போன், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேற்கொண்டு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்