சாலைக்கு வந்த தாமிரபரணி வெள்ளநீர்: நெல்லை-திருச்செந்தூர் இடையே போக்குவரத்து பாதிப்பு

சாலைக்கு வந்த வெள்ளநீரால், நெல்லை-திருச்செந்தூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

Update: 2021-01-13 23:58 GMT
ஸ்ரீவைகுண்டம்,

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால், தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கடைசி தடுப்பணையான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து நேற்று காலையில் வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றது.

இந்த நிலையில் மாலையில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததால், இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக நெல்லை-திருச்செந்தூர் மெயின் ரோட்டில், ஸ்ரீவைகுண்டம் அருகே புளியங்குளத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி தகவல் மைய வளாகத்துக்குள் வெள்ளம் புகுந்தது.

அங்கிருந்து பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீர் நெல்லை-திருச்செந்தூர் மெயின்ரோட்டில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கும், ஒரு அடி உயரத்துக்கும் அதிகமாக சென்றது. அதில் ஒரு சில வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

தொடர்ந்து நெல்லை-திருச்செந்தூர் மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வசவப்பபுரம், வல்லநாடு வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. அங்கு போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவைகுண்டம் முருகன் கோவிலுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. இதனால் கோவில் மூடப்பட்டது. தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள கொங்கராயகுறிச்சியில் சுமார் 10 வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. உடனே வருவாய் துறையினர் விரைந்து சென்று, வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் வசித்தவர்களை அருகில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைத்தனர்.

இதையடுத்து கொங்கராயகுறிச்சியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களிடமும் குறைகளை கேட்டறிந்தார். தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்