மந்திரி மீது பாலியல் புகார் மராட்டிய அரசியலில் பரபரப்பு

மராட்டிய சமூக நீதி மந்திரி தனஞ்செய் முண்டே மீது பாடகி ஒருவர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்துள்ளார்.

Update: 2021-01-14 01:58 GMT
மும்பை, 

மராட்டிய சமூக நீதித்துறை மந்திரியாக பதவி வகிப்பவர் தனஞ்செய் முண்டே (வயது 45). தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் மீது பாடகியான 37 வயது பெண் ஒருவர் மும்பை போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், மந்திரி தனஞ்செய் முண்டே 2006-ம் ஆண்டு முதல் தன்னை பல தடவை கற்பழித்து உள்ளார் என்றும், இது தொடர்பாக ஓசிவாரா போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

மந்திரி மீது பாடகி ஒருவர் அளித்த கற்பழிப்பு புகார் மராட்டிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து மந்திரி தனஞ்செய் முண்டே விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கு எதிரான சதிக்காக கற்பழிப்பு புகார் அளிக்கப்பட்டு உள்ளது. புகார் அளித்த பெண்ணின் சகோதரியுடன் எனக்கு தொடர்பு உள்ளது. இந்த உறவு காரணமாக அந்த பெண்ணுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இது எனது மனைவி, குடும்பத்தினர், நண்பர்களுக்கு தெரியும். அந்த 2 குழந்தைகளையும் எனது குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டு உள்ளனர்.

இந்தநிலையில் என் மீது வேண்டும் என்றே பாடகி கற்பழிப்பு புகார் கொடுத்துள்ளார். தற்போது பாடகியும், அவரது சகோதரியான நான் தொடர்பில் உள்ள பெண்ணும் சேர்ந்து பிளாக்மெயில் செய்கின்றனர். 2019-ம் ஆண்டு முதல் பாடகி என்னை மிரட்டி வருகிறார். இது தொடர்பாக நான் ஏற்கனவே போலீசில் புகார் அளித்துள்ளேன். மேலும் என் மீது அவதூறு பரப்புவதை தடை செய்து உத்தரவிட வேண்டும் என்று மும்பை ஐகோர்ட்டிலும் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளேன். இவ்வாறு மந்திரி தனஞ்செய் முண்டே கூறினார்.

மேலும் செய்திகள்