விழுப்புரத்தில் கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-01-15 04:29 GMT
விழுப்புரம், 

தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் வீரப்பன், டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாலச்சந்தர் அனைவரையும் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் சிவக்குமார், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில செயலாளர் இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தூய்மை காவலர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும், துப்புரவு பணியாளர்களுக்கு அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ள சிறப்பு காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் கேசவன், சுப்பிரமணியன், சிலம்பரசி, சதீஷ், சங்கீதா, அன்பு, ஆனந்தாயி, சிவக்குமார், வேல்முருகன், பீமாராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்