செங்குன்றம் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல் எறும்பு தின்னி நகங்கள், புலி பற்களும் சிக்கியது

செங்குன்றம் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.1 கோடி மதிப்பிலான 1 டன் செம்மரக்கட்டைகள், எறும்பு தின்னி நகங்கள் மற்றும் புலி பற்களை வனத்தறையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-01-16 02:22 GMT
செங்குன்றம், 

சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பி.டி.மூர்த்தி நகர் மகாத்மா காந்தி தெருவில் உள்ள ஒரு வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திருவள்ளூர் மாவட்ட வனசரகர் கிருஷ்ணகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று காலை வன அலுவலர் உமாசங்கர் மற்றும் வனத்துறையினர் குறிப்பிட்ட அந்த வீட்டுக்குள் புகுந்து அதிரடியாக சோதனை செய்தனர்.

அப்போது அந்த வீட்டில் சுமார் 1 டன் மதிப்பிலான செம்மரக்கட்டைகளும், 20 கிலோ எரும்பு தின்னி நகங்களும், 10-க்கும் மேற்பட்ட புலி பற்களும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இது சம்பந்தமாக அந்த வீட்டில் இருந்த அரவிந்த்(வயது 25) என்பவரை கைது செய்த வனத்துறை அதிகாரிகள், மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகி்ன்றனர்.

மேலும் செய்திகள்