விவசாயிகள் கவலைப்பட வேண்டாம்; அரசு உரிய நிவாரணம் வழங்கும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பேட்டி

விவசாயிகள் கவலைப்பட வேண்டாம் எனவும், அரசு உரிய நிவாரணம் வழங்கும் எனவும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பையன் கூறினார்.

Update: 2021-01-17 03:18 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையினால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மற்றும் நிலக்கடலை, உளுந்து, எள் உள்ளிட்ட நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறையினர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் தஞ்சை ஒன்றியத்தில் சக்கரை சாமந்தம், திருவையாறு ஒன்றியத்தில் கடுவெளி, பூதலூர் ஒன்றியத்தில் இந்தளூர் ஆகிய கிராமங்களில் மழையால் பாதித்த நெற்பயிர்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பையன் நேற்றுகாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இழப்பீடு

அப்போது அவரிடம், தண்ணீரில் மூழ்கி அழுகிய நிலையில் இருந்த நெற்பயிர்களை பிடுங்கி விவசாயிகள் காண்பித்தனர். இதை பார்த்த அவர், பாதித்த நெற்பயிருக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்தார். பாதித்த பயிர்கள் விடுபடாமல் கணக்கெடுப்பு செய்து அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

பின்னர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வழக்கமாக ஜனவரி மாதம் இவ்வளவு மழை பெய்யாது. பல ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய மழை தொடர்ந்து அதிகமாக பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. நெற்பயிர்கள் மட்டுமின்றி நிலக்கடலை, உளுந்து உள்ளிட்ட பயிர்களும் பாதிக்கப்பட்டு அழுகும் நிலையில் உள்ளன.

இன்சூரன்ஸ்

பாதித்த பகுதிகளை மாவட்டம் முழுவதும் நாங்கள் பார்வையிட்டுள்ளோம். விவசாயிகள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் சிரமத்தில் உள்ளனர். ஏற்கனவே முதல்-அமைச்சர் உரிய நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். நிறைய விவசாயிகள் இந்த ஆண்டு இன்சூரன்ஸ் செய்து இருக்கிறார்கள்.

விவசாயிகளுக்கு எந்தவித சிரமமும் இல்லாத அளவுக்கு இழப்பீடு, காப்பீடு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்த பகுதியில் பாதித்த பகுதிகளை யாருமே வரவில்லை. வயல்களை பார்க்கவில்லை என விவசாயிகள் நினைக்க வேண்டாம். அதிகஅளவு வயல்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதை பார்க்கிறோம். வருவாய்த்துறை, வேளண்மைத்றை, பொதுப்பணித்துறையினர் களத்தில் சென்று பார்த்து வருகிறார்கள்.

நிவாரணம்

நிறைய தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் வடிகாலில் உள்ள அடைப்புகளை அகற்றி வருகிறார்கள். வடகிழக்கு பருவமழைக்காக தாலுகா வாரியாக ஒரு குழு அமைத்து இருந்தோம். அதே குழுவில் தாசில்தார், துணை தாசில்தார் அளவிலான அலுவலர்கள் இடம் பெற்று இருந்தனர். அந்த குழுவினர் பாதிப்பு பகுதிகளை கணக்கெடுத்து வருகின்றனர்.

மழையினால் சுவர் இடிந்துவிழுமோ என அச்சப்படுபவர்கள் அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கி கொள்ளலாம். மக்களின் உயிருக்கும், பயிருக்கும் உரிய பாதுகாப்பு, அதற்கான நிவாரணம் கண்டிப்பாக அரசு வழங்கும். அதனால் விவசாயிகள் எதற்கும் கவலைப்பட வேண்டாம்.

3, 4 நாட்களில் முழு பாதிப்பு குறித்து விவரம் தெரியவரும். பயிர்க்காப்பீடு செய்து இருந்தால் காப்பீடு கிடைக்கும். இன்சூரன்ஸ் நிறுவனத்தினரும் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேரிடர் பாதித்த பகுதி என்று சொல்வதால் என்னென்ன கொடுக்க முடியுமோ அவைகள் எல்லாம் இப்போது கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது கலெக்டர் கோவிந்தராவ், வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின், உதவி இயக்குனர் இளையபெருமாள், வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்