தூத்துக்குடியில் நடைெபறும் குடியரசு தின விழாவில் அனைத்து துறையினரும் பங்கேற்க வேண்டும்: கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவு

தூத்துக்குடியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் அனைத்து அரசு துறை அலுவலர்களும் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2021-01-17 21:00 GMT
குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில்
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

குடிநீர் வசதி
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருகிற 26-ந்்தேதி தருவை மைதானத்தில் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற உள்ளது. மாநகராட்சியின் மூலம் விழா நடைபெறும் மைதானத்தில் சிறிய தொட்டிகள் மூலம் குடிநீர் வசதிகள் ஏற்படுத்திட வேண்டும். மேலும் மைதானம் தூய்மையாக இருக்க தேவையான குப்பை தொட்டிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மூலம் தூய்மைப்படுத்திட வேண்டும். அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு தீயணைப்புத்துறை மூலம் தீ தடுப்பு கருவிகள், தீயணைப்பு வாகனம் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் பொது சுகாதாரத்துறையின் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவ குழு மற்றும் 108 அவசர ஊர்தி தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

முகக்கவசம் கட்டாயம்
கொரோனா தொற்றின் காரணமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி்சாமியின் அறிவுறுத்தலின்படி குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பொது சுகாதாரதுறையின் மூலம் உடல் வெப்பநிலை கண்டறியும் கருவியின் மூலம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சானிடைசர் மற்றும் முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விழாவில் பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். தியாகிகளை கவுரவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து துறையினரும்...
நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகளின் பட்டியலை முன்கூட்டியே தயார் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கிட வேண்டும். சிறப்பாக பணியாற்றும் அலுவலர்களை, பணியாளர்களை தேர்வு செய்து நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சான்றிதழ்கள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக, அனைத்துத்துறை அலுவலர்களும் விழாவில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். தங்களது அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களையும் விழாவில் கலந்து கொள்ள வைக்க வேண்டும். விழா தொடர்பான பணிகளை அலுவலர்கள் தொய்வின்றி மேற்கொண்டு நடைபெற உள்ள விழாவை கடந்த ஆண்டை காட்டிலும் சிறப்பாக கொண்டாட அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத்சிங் கலோன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் அமுதா (பொது), பாலசுப்பிரமணியம் (வளர்ச்சி) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்