அந்தியூர் அருகே பரபரப்பு அரசு பஸ்சை துரத்திய ஒற்றை யானை

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் யானை, மான், காட்டெருமை, செந்நாய், கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

Update: 2021-01-18 05:04 GMT
அந்தியூர், 

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் யானை, மான், காட்டெருமை, செந்நாய், கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் அந்தியூரில் இருந்து கொங்காடைக்கு பர்கூர் தாமரைக்கரை வழியாக நேற்று முன்தினம் மாலை அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர் சீனிவாசன் என்பவர் ஓட்டிச்சென்றார். கண்டக்டராக குணசேகரன் என்பவர் இருந்தார். இந்த பஸ்சில் 45 பயணிகள் பயணம் செய்தனர். மணியாச்சி பள்ளம் அருகே முதல் வளைவில் திரும்பியபோது எதிரே வருபவர்களுக்கு எச்சரிக்கை செய்வதற்காக டிரைவர் ஹாரன் அடித்தார். ஹாரன் சத்தத்தை கேட்டதும் ரோட்டோரம் மறைவில் நின்று கொண்டிருந்த ஒற்றை ஆண் யானை திடீரென பிளிறியபடி ரோட்டை நோக்கி ஓடி வந்தது. பின்னர் ஆவேசத்துடன் அரசு பஸ்சின் பின்னால் வேகமாக ஓடியபடி துரத்த தொடங்கியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பயந்தபடி இருந்தனர். இதையடுத்து டிரைவர் பஸ்சை வேகமாக ஓட்டினார். ஆனால் யானை விடாமல் பஸ்சை துரத்தியபடி சென்றது.

மலைப்பாதையின் 2-வது வளைவில் திரும்பும்போது பஸ் வேகமாக சென்றுவிட்டது. அதன்பின்னரே யானை அங்கிருந்து திரும்பி காட்டு்க்குள் சென்றது. இதற்கிடையே பஸ்சில் இருந்த ஒரு சிலர் இந்த காட்சியை தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். யானையிடம் இருந்து பயணிகளை காப்பாற்றிய பஸ் டிரைவர் சீனிவாசனை பயணிகள் வெகுவாக பாராட்டினர்.

பர்கூர் மலைக்கிராமத்தில் அரசு பஸ்சை ஒற்றை யானை துரத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்